Wednesday 22 February 2012

வியாபார கல்வியும் சைடு பிசினஸ் வாத்தியார்களும்


விவசாயம், பைனான்ஸ், கடை பிரைவேட் டியூஷன் என ஆசிரியர்கள் வேறு வேலைகள் பார்ப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இப்படி சைடு பிசினஸ் நடத்தும் ஆசிரியர்களை கண்காணிக்க உத்தரவிட்டு பெற்றோர் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் பள்ளிக்கல்வி அமைச்சர்.
மற்ற தொழில் செய்பவர்களுக்கு இல்லாத பல சலுகைகள் ஆசிரியர்களுக்கு உண்டு. குறைந்த பணி நேரம், வாரம் 2 நாள் லீவு, ஆண்டுக்கு ஒன்றரை மாதத்துக்கு குறையாமல் சம்பளத்துடன் சம்மர் லீவு, பணிக்காலத்தில் ஒன்றரை ஆண்டுக்கு மெடிக்கல் லீவு.. என்று பட்டியல் நீளும். எதற்காக? வருங்கால இளைஞர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருப்பதால்.. இருக்க வேண்டும் என்பதால். ஆசிரியர்களுக்கு அந்த பொறுப்பு முன்னர் இருந்தது. இப்போது இருக்கிறதா? பதிலளிக்க சற்று தயங்குவார்கள் மக்கள். காரணம், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கெல்லாம் சேர்த்துதான் நேற்று நடந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் டோஸ் விட்டிருக்கிறார் பள்ளிக்கல்வி அமைச்சர்.
‘இந்த ஆண்டு பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் பாஸ் ஆகிவிட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்ப மாவட்ட கல்வி அலுவலர்கள் செயல்படுங்கள். எக்ஸாம் முடியும் வரை எந்த ஆசிரியர், அதிகாரிக்கும் லீவு கிடையாது. ஆசிரியர்கள் பள்ளியில் படிப்பு சொல்லிக் கொடுக்கும் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் செய்கிறார்கள். கந்து வட்டி விடுவது, ஜெராக்ஸ் கடை நடத்துவது என சைடு பிசினஸ் செய்கிறார்கள். பிரைவேட்டாக டியூஷனில் வரும்படி சேர்ப்பதில் குறியாக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் பாடம் நடத்துவதில் எப்படி கவனம் இருக்கும்? பள்ளி முடிந்து எப்போது போகலாம் என்ற எண்ணம்தான் வரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருங்கள். ஆசிரியர்கள் சைடு பிசினஸ் செய்கிறார்களா என்று தலைமை ஆசிரியர்கள், உயரதிகாரிகள் கண்காணியுங்கள்’ என்பது அமைச்சர் பேச்சின் சாராம்சம்.
2 நாள் முன்பு கோவையில் ஒரு விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், “நான் படிக்கும் காலத்தில் ஒருநாள் பள்ளிக்கு மாணவன் வராவிட்டால்கூட, அவனது வீடு தேடி வந்து ஆசிரியர் விசாரிப்பார். அந்த ஈடுபாடு இப்போது இல்லை. கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. கட்டணமும் பப்ளிசிட்டியும் பெருமை அல்ல. தரமான கல்வி, சிறந்த ஆசிரியர்களாலேயே ஒரு பள்ளிக்கு பெருமை” என்று குறிப்பிட்டிருந்தார். பள்ளி நிர்வாகங்களும் ஆசிரியர்களும் மனசாட்சியை தொட்டு சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம் இது.  (௨௨.௨.௧௨ : தமிழ் முரசு) 

No comments:

Post a Comment