Wednesday, 22 February 2012

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் : வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் தேவையில்லை???

ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் வரை மாத சம்பளம் பெறுபவர்கள், இந்த ஆண்டு முதல் வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆண்டு வருமானம்  ரூ  5 லட்சம் வரை பெறுபவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது, இதற்கான நோட்டிபிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதில் கூறியிருப்பதாவது:
தனிநபர் ஆண்டு வருமானம் ரூ 5 லட்சத்துக்கு மிகாமல் இருந்து, வருமான வரிச் சட்டத்தின்படி அது சம்பளமாகவும், வங்கி சேமிப்பு கணக்கின் டெபாசிட் வட்டி ரூ 10,000-க்கு மிகாமல் இதர வருமானமாகவும் பெற்றால் அவர் 2012 - 13ம் மதிப்பீடு ஆண்டு முதல் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு பெறலாம். அதாவது, கடந்த 2011&12ம் நிதியாண்டுக்கான ரிட்டர்ன்சை இந்த ஆண்டு தாக்கல் செய்யத் தேவையில்லை.
வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்து படிவம் 16 மூலம் வருமான வரி பிடித்த சான்றிதழ் பெறுவோருக்கு மட்டுமே ரிட்டர்ன்ஸ் தாக்கலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதே சமயம், கூடுதல் வருமான வரி செலுத்தியிருந்து, அதை திரும்பப் பெற வேண்டியிருந்தால் அவர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சக நோட்டிபிகேஷனில் கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு 1961ம் ஆண்டின் வருமான வரி சட்டத்தின்கீழ் வரி விலக்குக்கு மேற்பட்ட அளவில் மாத சம்பளம் பெறுவோர் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்தது.
இப்போது ரூ 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்பதால் நாடு முழுவதும் 85 லட்சம் பேர் விலக்கு பெறுவார்கள்.
இதன்மூலம், சம்பளதாரர்களுக்கு நிம்மதி மட்டுமின்றி, வருமான வரித் துறைக்கும் சுமை குறையும் என தெரிகிறது.

No comments:

Post a Comment