Saturday 31 March 2012

ரயில்வே பட்ஜெட் : ரயில் கட்டணம் ரத்துகளும் உயர்வுகளும்

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி முதல்வகுப்பு 2 அடுக்கு ஏசி, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள நாளை முதல் உயர்கிறது. ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 காசு முதல் 30 காசு வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதற்கு பிறகு ரயில்வே அமைச்சராக பதவியேற்ற முகுல்ராய் 2ம் வகுப்பு, தூங்கும் வசதிக்கொண்ட 2ம் வகுப்பு, 3அடுக்கு ஏசி வகுப்புக்கான கட்டண உயர்வை ரத்து செய்தார்.
அதேநேரத்தில் ஏசி 2 அடுக்கு வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 15 காசுகளும், ஏசி முதல்வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 30காசுகளும் உயர்த்தப்பட்டதில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தார்.
அதன்படி இந்தக் கட்டணம் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. திருச்சிக்கு முதல் வகுப்பு கட்டணம் 34 ரூபாயும், கோவைக்கு முதல்வகுப்பு ஏசி கட்டணம் 150 ரூபாயும், புதுடெல்லிக்கு 2 அடுக்கு ஏசிக்கட்டணம் 330 ரூபாயும் அதிகரிக்கிறது.
ஏப்ரல் மாதம் முதல் பயணம் செய்ய மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாக முன்பதிவு செய்தவர்கள் பழைய கட்டணத்திலேயே முன்பதிவு செய்திருப்பார்கள். அவர்களிடம் பயணத்தின் போது கூடுதல் கட்டணத்தை பயணச்சீட்டு பரிசோதகர் வசூலிப்பார். இப்பணியில் கடந்த ஒரு வாரமாக தெற்கு ரயில்வே வணிகப்பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் நடைமேடை டிக்கெட் கட்டணமும் நாளை முதல் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்கிறது.
சீசன் டிக்கெட் கட்டணம்:
முதல் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணமும் நாளை முதல் அதிகரிக்கப்படும். சீசன் டிக்கெட் அதிகபட்சமாக 150கிமீ தூரத்திற்கு மட்டுமே எடுக்க முடியும்.
இதற்கு இடைப்பட்ட எந்த தூரத்திற்கு எடுத்தாலும் பழைய கட்டணத்துடன் கூடுதலாக 15 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். ஆக மாதந்திர சீசன் டிக்கெட் கட்டணம் 15 ரூபாய் மட்டுமே அதிகரிக்கிறது.
அதாவது குறைந்தபட்ச முதல் வகுப்பு மாதந்திர சீசன் டிக்கெட் கட்டணம் 10கிமீ வரை 240 ரூபாயாக உள்ளது.
இது இனி 255 ரூபாயாக இருக்கும். இத்துடன் ஏற்கனவே அமலில் உள்ள 20 ரூபாய் வளர்ச்சி கட்டணம் வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment