Monday, 2 April 2012

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்...

பன்றிக் காய்ச்சல் 3 நிலைகளில்...

ஆரம்ப நிலை : காய்ச்சல், தொண்டை கரகரப்புடன் சளி, இருமல், உடல்வலி, தலைவலி, வாந்தி, பேதி & இவை ஆரம்ப கட்டம். சிகிச்சை பெற்று, 48 மணி நேரம் வீட்டில் ரெஸ்ட் போதும்.
இரண்டாவது நிலை : முதல் கட்ட அறிகுறியுடன் கடும் காய்ச்சல், கடும் தொண்டை வறட்சி என்றால் உஷார். 5 வயது குழந்தைகள் என்றால் உடனே சிகிச்சை முக்கியம்.
முற்றிய நிலை: மேற்சொன்ன இரு கட்ட பாதிப்புடன் நெஞ்சு வலி, மூச்சு திணறல், குறைந்த ரத்த அழுத்தம், நகம் நீலமாவது போன்றவை இருந்தால் முற்றிய நிலை. மருத்துவமனையில் சேர்ந்து விட வேண்டும்.

கிங் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதனை
காய்ச்சல், சளி தொந்தரவு, உடல் வலி, தலை வலி, தொடர்ந்து தும்மல், தொண்டை வறண்டு போதல், உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்றவைகளாகும். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து தங்களது சளி மாதிரிகளை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. காலை 10 முதல் மாலை 6 மணிக்குள் பரிசோதனைக்கு வரவேண்டும். ஒரு வாரத்திற்குள் பரிசோதனை முடிவு தெரிவிக்கப்படும். அதன்பின், பன்றிகாய்ச்சல் இருப்பது உறுதியானால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று கொள்ளலாம்.
பன்றிக்காய்ச்சல் பயம் வேண்டாம்
அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை கூறுகையில், "பன்றிக்காய்ச்சல் நோயினால் யாரும் பயப்பட வேண்டாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்தான், நோய் தாக்கும். அதனால், சத்துள்ள உணவுகளையும், காய்கறியும் சாப்பிட வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பன்றிக்காய்ச்சல் மட்டுமல்ல, எந்த நோயும் நம்மை தாக்காது” என்றார்.


பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் இந்நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் பன்றிக்காய்ச்சல் தாக்கிய விவசாயி ஒருவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருந்த இருவர் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் பன்றி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி ஒருவர் நேற்று இறந்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சளி, இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கந்தசாமியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த விவசாயிக்கு பன்றிக்காய்ச்சல் எப்படி வந்தது? தொற்ற காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. சுகாதார அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு இது போன்ற அறிகுறி இருக்கிறதா என்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
2 நோயாளிகள் ஓட்டம்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சல் என இருவர் வந்தனர். இவர்களுக்கு பரிசோதனை செய்தபோது 2 பேருக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த அந்த 2 நோயாளிகளும் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் நேற்று ஓட்டம் பிடித்தனர். இதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிச் சென்ற இந்த இருவரால், பலருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தொற்றும் அபாயம் இருக்கிறது. மருத்துவமனையில் 2 பேரும் கொடுத்த முகவரி போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment