Monday 2 April 2012

மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்கள் : பயனுள்ளதாக அமையுமா???

மீனவர்கள் நலன் கருதி, "மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையங்களை" அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விசைப் படகுகளில் எடுத்துச்செல்லும் ஐஸ்பார்கள் வெயில் காலங்களில் விரைவாக உருகி விடும். அதனால் பதப்படுத்தப்பட்ட மீன்களும் அழுகி விடும். இது போன்ற நிலையை தவிர்க்க மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
நடுக்கடலுக்கு சிறிய ரக படகுகளில் சென்று மீன்பிடிப்பவர்கள் தாங்கள் பிடித்த மீனை பதப்படுத்த வழியில்லாமல் திண்டாடும் நிலை உள்ளது. இது போன்ற நிலையை தவிர்க்க “மிதக்கும் மீன் பதப்படுத்தும் நிலை யம்” அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்போடு இந்த நிலையம் அமையும். இந்த மிதவை நிலையம் அமைக்கப்படும் தாய் கப்பலில் மீன்களை பதப்படுத்தும் வசதி, குளிர்சாதன வசதி, மீனவர்களுக்கான அவசரகால மருந்து போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த கப்பலில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இது கடலில் குறிப்பிட்ட நாட்டிகல் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இது குறித்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த தகவலின் அடிப்படையில் சிறிய ரக படகுகளில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை சேமித்து, பதப்படுத்தி பாதுகாத்து வைக்க விரும்பினால் இந்த தாய் கப்பலுக்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்படும் கிடங்கில் மீன்களை கொட்டி, விட்டு திரும்பவும் கடலுக்கு செல்லலாம். அதே போல ஒவ்வொரு மீனவருக்கும் தனித்தனி கிடங்குகள் வழங்கப்படும். இந்த கப்பல்கள் வங்காளவிரிகுடா மற்றும் இந்திய பெருங்கடலில் நிறுத்தப்படும்.
விரைவில் இந்த மிதவை மீன் பதப்படுத்தும் நிலையங்கள் நிறுவ உள்ளதால் இந்த துறையில் அனுபவம் உள்ள நிறுவனத்தார் தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, மிதவை நிலையம் அமைக்கப்படும்.
இதற்கான டெண்டர்களும் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment