Tuesday 24 April 2012

தொடர் மதிப்பீட்டுமுறை அறிமுகம் : வரும் கல்வியாண்டு (1 - 8 வகுப்பு வரை)

நாடகம், குவிஸ், உரை யாடல் என்று பன்முக திறமையாளர்களாக மாணவ மாணவியர் விளங்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு முழு மை யான தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மனப்பாட முறை கல்வி யில் இருந்து செயல்வழி கல்விக்கு தமிழக கல்வி முறை மாற்றம் பெற்ற நிலையில் மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணுதல் மற்றும் சிந்தனைதிறன்சார் மதிப்பீடு முறை தவிர்த்து முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
மத்திய இடைநிலை கல்வியமைப்பு மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஏற்கனவே 1 முதல் 10ம் வகுப்பு வரை முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் வரும் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கும் 2013&14ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் முப்பருவ கல்விமுறையும், முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. இதில் கல்வி யாண்டு என்பது ஜூன் முதல் செப்டம்பர், அக் டோபர் முதல் டிசம்பர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை என 3 பருவங்களை கொண்டதாக இருக்கும்.
முழுமையான மற்றும் தொடர் மதிப்பீடு முறை பள்ளி கல்வி சார் மற்றும் பள்ளி கல்வி சாரா பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொரு பருவமும் முறையான மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீட்டை உள்ளடக்கியது ஆகும். முறையான மதிப்பீடு பருவம் முழுமைக்குமான மதிப்பீடு. தொகுப்பு மதிப்பீடு ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் பாடத்திட்டம் சார்ந்ததாக நடத்தப்படுகின்ற எழுத்துதேர்வு ஆகும்.
முறையான மதிப்பீட்டில் 40 சதவீத மதிப்பெண், தொகுப்பு மதிப்பீட்டில் 60 சதவீத மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முறையான மதிப்பீட்டின் கீழ் முப்பருவமுறையில் பாட அறிவை சோதிக்கும் எழுத்து தேர்வு கள், திறன் சோதிக்கும் செயல்பாடுகள் பல நடத்தப்படும். கலந்துரையாடல் (டிஸ்கஷன்), திறனாக்க செயல்பாடு (புராஜக்ட்), விவாதம் (டிபேட்) உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 5 மதிப்பெண்கள் என்ற வகையில் அதிகபட்சம் 6 வகுப்பறை தேர்வுகள் நடத்தப்படும். 6ல் மிக சிறந்த மதிப்பெண் பெற்ற 4 தேர்வுகளின் மதிப்பெண்களை எடுத்துக்கொண்டு அவற்றை 20க்கு எத்தனை மதிப்பெண்கள் என பதிவு செய்யப்படும்.
இதனை போன்ற திறன் சார்ந்த தேர்வுகளில் 6 தேர்வுகள் நடத்தப்படும். இவற்றிலும் மிக சிறந்த 6 தேர்வு மதிப்பெண் எடுத்து 20 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இம்முறை பருவ முழுமைக்கும் நடத்தப்படும். அந்தவகையில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்குத்தான் மாணவர்கள் நன்றாக படித்து எழுத வேண்டும். இதர விஷயங்கள் செயல்பாடுகள் மூலம் மதிப்பெண் பெற வேண்டிய நிலையில் உள்ளது. தமிழ், ஆங்கில மொழிபாடங்களில் உரையாடல், வினாடி வினாக்கள் உண்டு. கணித பாடத்தில் குறுக்கெழுத்து, ஆய்வக செய்முறைகள், அசைன்மென்ட்ஸ் உள்ளன. அறிவியலில் களப்பயணம், புராஜக்ட் உண்டு. சமூக அறிவியலில் நாடகம் நடித்தல், ஒரு பாத்திரமாக மாறி நடித்தல் உள்ளிட்ட விஷயங்களும் உள்ளன. இவை தவிர வகுப்புகளுக்கு ஏற்ப பட்டாம் பூச்சிகள் சேகரித்தல் முதல் தேச தலைவர்களின் பொன்மொழிகள் சேகரித்தல் வரை உண்டு. மேலும் மாணவர்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையை தவிர்க்கவும், மதிப்பீடு செய்பவர்களின் பாரபட்சத்தை குறைக்கவும் மதிப்பெண் வழங்குவது தவிர்க்கப்பட்டு கிரேடு முறையும் அறிமுகம் செய்யப்படுகிறது.
மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை
இது தொடர்பாக குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையால் தேர்வுகள் குறித்து இனி மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஒரே அளவுகோல்கள் தேர்வில் இனி இல்லை. இனி கற்பதை மட்டும் மதிப்பிடும் பணி நடக்கிறது. தனி நபர் திறமைகளுக்கு அங்கீகாரமும் பாராட்டும் உண்டு. அனுபவத்தையும், திறமைகளையும் ஊக்குவிக்கும் அணுகுமுறை புதிய மதிப்பீட்டு முறையாகும். முறையான மதிப்பீடு மாணவரும், ஆசிரியரும் சேர்ந்து ஈடுபடும் கற்றல் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது ஆகும். தொகுப்பு மதிப்பீடு ஒவ்வொரு பருவத்தின் இறுதியில் நடக்கும் தேர்வு. இது எழுத்து தேர்வு ஆகும். அப்பருவத்தில் கற்பிக்க தரப்பட்ட பாடங்களை உள்ளடக்கியது. ஒரு பருவத்தில் முழுமையாக கற்ற பகுதி அடுத்த பருவத்தில் எடுத்துக்கொள்வதில்லை. ஆயினும் அடிப்படை கூறுகள், நடைமுறைகள், விதி முறைகள் மற்றும் சமன்பாட்டுதத்துவங்கள் மறுபடியும் திருப்புதலுக்கு உள்ளாக்கப்பட்டு எப்பருவத்திலும் கையாளப்படும் மற்றும் கற்பிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment