Tuesday 3 April 2012

டாஸ்மாக் கடை இடம் மாற்ற நன்கொடை எதிர் பார்கிறீர்கள் போலும் : ரூ 10 ஆயிரத்துக்கு செக் உடன் மனு

டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி குறைதீர் நாளில் அளித்த மனுவுடன் ரூ 10 ஆயிரத்துக்கு அன்பளிப்பு செக் இணைக்கப்பட்டிருந்தது.
கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன். நீதியைத்தேடி என்ற பெயரில் சட்டப்பத்திரிகை நடத்தி வருகிறார்.
நேற்று இவர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்துக்கு வந்து பல மனுக்களை கொடுத் தார். அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். ஒரு மனுவுடன் ரூ 10 ஆயிரத்துக்கான செக் இணைக்கப்பட்டு இருந்தது. மனுவில், ‘கடவூர் தாலுகா அலுவலகம் தரகம்பட்டியில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாகவே மதுபானக்கடை உள்ளது. அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து 100மீ தொலைவுக்குள் மதுபானக்கடைகள் அமைக்கக்கூடாது என அரசு விதி உள்ளது.
இதுகுறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அன்பளிப்பு எதிர்பார்ப்பதாகத்தான் இருக்கும் என கருதி, ரூ 10 ஆயிரத்துக்கான காசோலை(செக்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மதுபான கடையை அகற்ற வேண்டும், அகற்றியவுடன் கூடுதல் அன்பளிப்பாக ரூ 10 ஆயிரம் அளிக்கப்படும்’ என வாசுதேவன் குறிப்பிட்டிருந்தார். கோரிக்கை மனுவுடன் செக் இணைத்திருந்தது பற்றி கலெக்டரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் ஷோபனா கூறுகையில், "மனுவின் பின்னால் செக் இருப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.
இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment