Saturday, 21 April 2012

இத்தாலி அரசு சமரசம் : 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு

italy_ship_released
இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு வழங்க இத்தாலி அரசு முன் வந்துள்ளது.

கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த படகு மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குமரி, கேரளாவை சேர்ந்த 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், நஷ்டஈடு கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாக பேசி தீர்க்க இத்தாலி அரசு முயற்சி செய்தது. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரின் வக்கீல்களை இத்தாலி அரசு பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அப்போது, 2 மீனவர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ1 கோடி நஷ்டஈடு தருவதாகவும், வழக்கை சமரசமாக பேசி தீர்த்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், தாக்குதலில் சேதமடைந்த படகின் உரிமையாளருக்கு ரூ 17 லட்சம் தரவும் ஒப்புக் கொண்டனர்.  (Dinakaran)

No comments:

Post a Comment