மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் அரசு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 15 சதவீத இடம் அந்தந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் இந்த நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் இல்லை. இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் தான் கேள்விகள் உள்ளன. அந்த நடைமுறையை தான் மத்திய அரசு பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. எனவே அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்தப்படும் இந்த அகில இந்திய நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் தமிழில் வெளியிட உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 படிக்கிறார்கள். இதில் 75 சதவீதம் பேர் தமிழ் வழி கல்வியில் படிக்கிறார்கள். எனவே நுழைவுத்தேர்வு எழுத முடியாமல் தவிக்கிறார்கள். ஆகவே அகில இந்திய நுழைவுத்தேர்வை தமிழகம், புதுவை மாணவர்கள் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும். அதற்கு தகுந்தபடி தமிழில் கேள்விகளை வெளியிடவேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், பழனிவேல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வரும் 23ம் தேதி மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment