Friday 20 April 2012

குமரியில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் : நீர் உணவுகளை சாப்பிட வேண்டும்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குமரியில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
குமரிமாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக காணப்படுகிறது. ஆங்காங்கே மழை பெய் துள்ள போதிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வைரஸ் நோயான அம்மை நோய் பலரை தாக்கியுள்ளது. காய்ச்சல், உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் இந்த நோய் தொடங்குகிறது.
நோய் தாக்கியவர்கள் சுமார் ஒருமாத காலம் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கும் நிலை உள்ளது. அருமனை, வெள்ளாங்கோடு, காரோடு, பனச்சமூடு, குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடற்கரை கிராமங்களில் இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது.
மக்கள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் இந்த நோய் வேகமாக பரவுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அம்மை நோயை உருவாக்கும் வைரஸ் எளிதில் பெருகி பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. ஒருவீட்டில் ஒருவரை இந்த நோய் தாக்கினால், அந்த வீட்டிலுள்ள அனைவருக்கும் வந்து விடுகிறது. மேலும் அந்த கிராமத்திலுள்ளவர்களையும் நோய் தாக்கும் வாய்புள்ளது.
இந்த நோய் தாக்கியவர்கள் பிறருடன் பழகாமல் தாங்கள் பயன்படுத்தும் துணிகள் உள்பட அனைத்து பொருட்களையும் வேறு யாரும் பயன் படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டி யது அவசியம்.

1 comment:

  1. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும். மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

    ReplyDelete