Friday 20 April 2012

இந்தியாவில் இனி யானைகளுக்கும் RC புத்தகம் : கேரள அறிமுகம்

வாகனங்களுக்கு இருப்பது போல் யானைகளுக்கும் ஆர்சி புத்தகம் வழங்கும் புதுமை திட்டத்தை கேரள அரசு இன்று முதல் தொடங்குகிறது. 
வளர்ப்பு யானைகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நடிகர் ஜெயராம் முதல் இப்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் கணேஷ் குமார் உட்பட பல முக்கிய பிரபலங்கள் தங்கள் வீடுகளில் யானைகளை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். இது தவிர கேரளாவில் சிறிய கோயிலாக இருந்தாலும் கூட திருவிழா நடக்கும்போது அந்த கோயிலில் நெற்றிப்பட்டம் சூடிய யானையின் வீதி உலா கண்டிப்பாக இருக்கும்.
பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் மட்டும் 60க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இது தவிர, திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழாவின்போது, ஒரே இடத்தில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும் "குடைமாற்றம்" நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றதாகும். கேரளாவில் யானை உரிமையாளர்களுக்கும், பாகன்களுக்கும் கூட சங்கம் உள்ளது.
இந்நிலையில், யானைகளுக்கு ஆர்சி புத்தகம் வழங்கும் திட்டத்தை கேரள அரசு தயாரித்துள்ளது. இந்த புத்தகத்தில் யானையின் பெயர், வயது, பதிவு எண், மைக்ரோ சிப் எண், உரிமையாளரின் பெயர், இதற்கு முன்பு எங்கு இருந்தது, தற்போது எங்கு இருக்கிறது, உடல் அளவுகள், தும்பிக்கை மற்றும் தந்தங்களின் அளவுகள், வாலின் நீளம், உடல் அடையாளங்கள், இதற்கு முன்பு மதம் பிடித்ததா? மதம் பிடித்தால் என்னென்ன செய்யும், இன்சூரன்ஸ் விவரங்கள் உட்பட யானையின் அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். யானை, அதன் உரிமையாளர் மற்றும் பாகனின் புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கும். யானைகளுக்கு ஆர்சி புத்தகம் வழங்கும் விழா கோட்டயத்தில் இன்று நடக்கிறது. இதில், ஆர்சி புத்தகங்களை வனத்துறை அமைச்சர் கணேஷ் குமார் வழங்குகிறார்.

No comments:

Post a Comment