விபத்தில் சிக்கினால் 108 மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் கருவியை நாகர்கோவில் தோவாளை லயோலா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த தோவாளை லாயோலா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த மாணவர்கள் ஐசன் ஐசக், விவோ, மன்பிரீத், மார்ட்டீன். இவர்கள் 4 பேரும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இறுதியாண்டு பயிலும் அவர்கள் ஜி.பி.எஸ் உதவியுடன் செயல்படும் விபத்து கால உயிர்காக்கும் கருவியை கண்டு பிடித்துள்ளனர். இதன்படி கார் மற்றும் வாகனங்களில் இந்த கருவியை பொருத்த வேண்டும். மேலும் இத்துடன் நமக்கு வேண்டிய 3 செல்போன் அல்லது தொலை பேசி எண்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
வாகனம் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் அதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக தானாகவே இயங்கும் இந்த கருவி ஜி.பி.எஸ் உதவியுடன் 108 மற்றும் அருகாமையில் உள்ள பெரிய மருத்துவமனை மற்றும் நாம் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ் மெயிலில் தகவல் தெரிவிக்கும். மேலும் வாகனம் விபத்தில் சிக்கியுள்ள இடத்தையும் தெரிவிக்கும். இதனால் நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லா பகுதியில் விபத்தில் சிக்கினாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உயிர் காக்கப்படும்.
இதுபற்றி மாணவர்கள் விவோ மற்றும் ஐசன் ஐசக் ஆகியோர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் 4 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர். 1.56 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். இதில் 30 ஆயிரம் பேர் 3 மணி நேரத்திற்குள் சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளனர். எனவே சாலை விபத்தில் இறப்பதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கருவியை கண்டு பிடித்துள்ளோம். இதற்கு வெறும் ரூ.300 மட்டுமே செலவு ஆகும். நாங்கள் படிப்பை முடித்த பின்னரும் இத்துறையில் பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு நோபல் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கில் செயல் பட்டு வருகிறோம். இதுவரை எங்களது கண்டு பிடிப்புகளை காப்புரிமை (பேடன்ட்) பதிவு செய்யவில்லை. இனிமேல் 3 கண்டு பிடிப்புகளுக்கு சேர்த்து காப்புரிமைக்கு பதிவு செய்ய உள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment