இன்டர்நெட் சாட்டிங் மூலம் ஏற்பட்ட நட்பால், நாகர்கோவில் மாணவியின் வீட்டுக்கு, சென்னையில் இருந்து மாதம் ஒருமுறை நள்ளிரவில் வந்து சென்ற மாணவர் சிக்கினார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவரை எச்சரித்து அனுப்பினர்.
நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இன்டர்நெட் சாட்டிங்கில் ஆர்வம் கொண்டவர். அவருக்கு சென்னையில் உள்ள ஒரு இன்ஜினிரியங் மாணவரின் நட்பு கிடைத்தது.
சாட்டிங் மூலமே அனைத்து தகவல் களையும் பரிமாறிக் கொண்ட இவர்கள், செல்போனிலும் நட்பை வளர்த்துக் கொண்டனர். இந்த நட்பு இவர்களுக்குள் காதலாக மாறியது. ஒவ்வொரு மாதமும் அந்த வாலிபர் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு இரவில் நாகர்கோவில் வரும் குருவாயூர் எக்ஸ்பிரசில் நாகர்கோவில் வருவார். நள்ளிரவில் அந்த மாணவி வீட்டின் பின்புற கதவை திறந்து வைத்து இருப்பார். பாத்ரூம் செல்வது போல் வந்து, மாணவரை தனது படுக்கை அறைக்குள் அழைத்து செல்வார். நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை இருவரும் ஒன்றாக இருப்பார்கள். அதிகாலை 4 மணிக்கு அந்த வாலிபர் சென்று விடுவார். மீண்டும் நாகர்கோவிலுக்கு காலை 5.30 மணிக்கு வரும் குருவாயூர் எக்ஸ்பிரசில் சென்னை புறப்பட்டு செல்வார். இந்த நள்ளிரவு சந்திப்பு மாத கணக்கில் நீடித்தது.
இந்நிலையில் திடீரென இவர்களுக்குள் ஏதோ தகராறு வர மாணவி தொடர்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் வழக்கம் போல், ஒரு நாள் நள்ளிரவில் வந்து சேர கதவு திறக்கப்படவில்லை. பின்னர் செல்போன் மூலம் மெசேஜ் கொடுத்ததும் மாணவி கதவை திறந்து இருக்கிறார். படுக்கை அறைக்குள் சென்றதும் மாணவி தனது காதலனை கண்டித்து உள்ளார். அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு, மாணவியின் பெற்றோர் படுக்கை அறை கதவை தட்டி உள்ளனர். அப்போது அந்த வாலிபரை கட்டிலுக்கு அடியில் படுக்க வைத்து விட்டு மாணவி கதவை திறந்துள்ளார். சோதனை நடத்திய பெற்றோர் கண்ணில் அந்த வாலிபர் சிக்க, விவகாரம் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு சென்றது.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். “நள்ளிரவில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவது வழக்கம். அதற்காகத்தான் வந்தேன்” என்றார் அவர். சென்னையில் உள்ள மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவழைக்க அவர்களும் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரின் எதிர்கால நலன் கருதி போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தங்களது மகனுக்கோ, மகளுக்கோ சகல வசதிகள் செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டும் பெற்றோர். அவர்களை கண்காணிக்கவும் வேண்டும். அப்போது தான் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment