Thursday 19 April 2012

மீன் நோய் : இளம்பெண் அவதி : சில வகை கிழங்குகள் உணவு

இங்கிலாந்தின் யார்க் பகுதியை சேர்ந்தவர் கிளாரி ரோடஸ் (34). திருமணமாகி, 4 குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஒரு பாதிப்பு. உடலில் இருந்து திடீர் திடீரென அழுகிய மீன் நாற்றம் வீசும். சுற்றி இருப்பவர்கள் அலறி ஓடுவார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இதுபற்றி கிளாரி கூறியதாவது:
20 வயது முதல் இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறேன். ஆரம்பத்தில் குப்பென்று நாற்றம் வீசியது. வியர்வை, சிறுநீர் மட்டுமின்றி மூச்சு காற்றுகூட அழுகிய மீன் நாற்றம் அடிக்கும். எனக்கே பொறுக்க முடியவில்லை. வாய், பல்லில் இருந்து வருவதாக நினைத்தேன். பல் டாக்டரிடம் காட்டினேன். ஒரு பிராப்ளமும் இல்லை என்றார். ஆனாலும், வாயில் இருந்துதான் நாற்றம் வருவதாக உறுதியாக நம்பினேன். நாற்றம் தாங்காமல் ஒரு நாளுக்கு 20 முறை பல் துலக்கினேன்.
ஆனாலும், நாற்றம் நிற்கவில்லை. பற்களை பிடுங்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையாக பல் வலிப்பதாக கூறினேன். சில பற்களையும் டாக்டர் பிடுங்கினார். அதற்கு பிறகும் நாற்றம் தொடர்ந்தது. நான் போகும் இடங்களில் எல்லாரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள். வேலை போனது.
உடல் துர்நாற்றம் என்று கருதி தினமும் 10 முறைக்கு மேல் வாசனை சோப் போட்டு குளிப்பேன். அதையும் மீறி நாற்றம் அடிக்கும். மனஉளைச்சலில் தற்கொலைக்குகூட முயன்றேன்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், எதேச்சையாக டிவி பார்க்கும்போது, சிலர் இதுபோல வித்தியாசமான மீன்நாற்ற நோயால் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். எனக்கும் அந்த பாதிப்புதான் ஏற்பட்டிருக்கிறது என தெரிந்துகொண்டேன். டாக்டரிடம் காட்டினேன். டிரைமெத்திலமின்யூரியா (டிஎம்ஏயு) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். ஸ்டிராபெர்ரி, பேரிக்காய், கேரட், உருளை உள்பட சில வகை கிழங்குகள் தவிர வேறு எதுவும் சாப்பிட கூடாது என்று கூறிவிட்டார். படிப்படியாக நாற்றம் போய்விட்டது. உடல் எடையும் கணிசமாக குறைந்திருக்கிறேன். உடல் நாற்றம் போய்விட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேன், அரிசி, புதிய பிரெட் ஆகியவை கொஞ்சம் சாப்பிடலாம். இந்த டயட்டை மீறினால் திரும்பவும் மீன்நாற்றம் வந்துவிடும் என்று டாக்டர் எச்சரித்திருக்கிறார். 
இவ்வாறு கிளாரி கூறியுள்ளார்.
டிஎம்ஏயு என்ற அரிய மரபணு பாதிப்பை டாக்டர்கள் ‘பிஷ் ஓடர் சிண்ட்ரோம்’ என்கின்றனர். கல்லீரலில் டிரை மெத்திலமின் என்ற மூலப்பொருளை கரைக்க முடியாததால் இந்த உடல் நாற்றம் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடையாது. உடலில் டிரைமெத்திலமின் அளவை குறைப்பதால் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

No comments:

Post a Comment