Thursday, 17 May 2012

கேரளா : 21 வயது ஆனவர்களுக்கு மட்டுமே மது

கேரளாவில் இனிமேல் 21 வயது ஆனவர்கள் மட்டுமே ஒயின் ஷாப்புகளில் மது வாங்க முடியும். இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. இங்கு ரேஷன் கடைகளில் இருக்கும் கியூவை விட ஒயின் ஷாப்புகளின் முன் நிற்கும் கியூதான் அதிகமாக இருக்கும். கேரளாவில் மது வகைகளை விற்பனை செய்ய கேரள மதுபான விற்பனைக் கழகம் சார்பில் மூலைமுடுக்குகளில் கூட சில்லரை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். ஆனால் கடை திறப்பதற்கு முன்பு அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் குடிமகன்கள் வரிசையில் மிகுந்த பொறுமையுடன் வரிசையில் நிற்பதை பார்க்கலாம். ஓணம், விஷூ, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும். இந்த பண்டிகை நாட்களில் பல மணி நேரம் வரிசையில் நின்றால் தான் "சரக்கை" வாங்க முடியும்.
கடந்த சில வருடங்களுக்கு முன் வரை ஒயின் ஷாப்புகளிலோ, பார்களிலோ செல்பவர்கள் யாரவாது பார்த்து விடுவார்களோ என பதுங்கி, பதுங்கி சென்றனர். ஆனால் இப்போது பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் கூட மிக தைரியமாக பார்களுக்கு சென்று மது அருந்துகின்றனர். இதைக் கட்டுப்படுத்த கேரள அரசு ஒயின் ஷாப்புகள் மற்றும் பார்களில் மது வாங்குவதற்கான வயது வரம்பை 18 ஆக நிர்ணயித்தது.
இந்நிலையில் இந்த வயது வரம்பு 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் 21 வயதான "குடிமகன்"களுக்கு மட்டுமே கேரளாவில் மதுக்கடைகளில் மது வாங்க முடியும். இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "கல்வி நிறுவனங்களுக்கு 400 மீட்டர் தூரம் வரை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்த உத்தரவும் உடனடியாக அமலுக்கு வருகிறது” என்றார்.

No comments:

Post a Comment