சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று ஓடும் ரயிலில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறிய 2 குழந்தைகளின் தந்தை, அவர்கள் கண் முன்னே ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையிலிருந்து மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக நண்பகல் 12.30 மணிக்கு வந்தது. 4வது பிளாட்பாரத்தில் வந்த அந்த ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர்.
ரயிலின் பின் பகுதியில் உள்ள முன்பதிவில்லா பெட்டி மற்றும் அதன் அருகேயுள்ள சில பெட்டிகளில், ரயில் நிற்பதற்கு முன்பே பயணிகள் முண்டியடித்து ஏறினர். அப்போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் படிக்கட்டில் வேகமாக ஏறினார். அப்போது கால் இடறி, ரயிலுக்கு அடியில் சிக்கினார். அவர் மீது சக்கரம் ஏறி, உடல் இரண்டு துண்டானது. இதனைப் பிளாட்பாரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த 3 குழந்தைகள் அலறித் துடித்தனர். அருகே நின்ற பயணிகள் சம்பவம் குறித்து பிளாட்பாரத்தில், பாதுகாப்பாக ரயிலில் பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சண்முகத்திடம் தெரிவித்தனர். சேலம் ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அதில், ரயிலுக்கு அடியில் சிக்கி இறந்தவர் சேலம் வாழப்பாடி அடுத்த தமையனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி துரையன் (40) என்பதும், இவர் தனது குழந்தைகள் சத்தியமூர்த்தி (14), சத்யராஜ் (9), அண்ணன் பெரியசாமியின் மகள் மாலினி (13) ஆகியோருடன் மும்பை செல்வதற்காக ரயிலில் ஏற முயன்றபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர்கள், மும்பைக்கு செல்ல முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்ய சீட் பிடிக்க ஓடும் ரயிலில் ஏறியபோது விபத்து நடந்தது உறுதி செய்யப்பட்டது.
கண் முன்னே தந்தை இறந்ததை பார்த்த குழந்தைகள் கதறி துடித்தனர். அவர்களை அங்கிருந்த பயணிகள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து சேலம் ரயில்வே போலீசார் துரையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment