Monday 14 May 2012

60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பிக்க அனுமதி

ரேஷன் கார்டுகளை புதுப்பிக்காத சுமார் 4 லட்சம் பேருக்கு உணவுப்பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 60 நாட்களில் கிடைக்கும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
tamil-nadu-ration-card-application
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82,595 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 2012ம் ஆண்டு இறுதி வரை நீட்டித்துக் கொள்ளும் வகையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது. 4 லட்சத்து 16,925 கார்டுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி ரத்து செய்யப்பட்ட கார்டுதாரர்கள், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது, பழைய ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காப்பியை இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரர் உண்மையிலேயே இருக்கிறாரா? என்பதை, உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி உறுதி செய்த பிறகு, புதிய ரேஷன் கார்டு 60 நாட்களுக்குள் வழங்கப்படும்.
ரேஷன் கார்டுகளில் குழந்தைகளின் பெயர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என்றால், பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பெரியவர்கள் (கணவன் அல்லது மனைவி) என்றால், ஏற்கனவே வெளியூர்களில் இருந்து ரேஷன் கடைகளில் உள்ள பெயரை நீக்கி விட்டதற்கான சான்றிதழை வாங்கி வர வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு மாறி வருபவர்கள், பழைய இருப்பிட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி வர வேண்டும்.
ரேஷன் பொருட்கள் எதுவும் வேண்டாம்; முகவரியை உறுதிப்படுத்த மட்டுமே ரேஷன் கார்டு தேவை என்றால் புதிய கார்டுகள் 10 நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தக்கல் கார்டு தேவைப்படுபவர்கள், 2 அல்லது 3 ஆண்டுகள் அந்த பகுதியில் இருந்ததற்கான இருப்பிட சான்றிதழை மட்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மண்டல அதிகாரிகள் அந்த முகவரிக்கு வந்து பரிசோதனை செய்வார்கள்.
உண்மையில் அதே முகவரியில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனே தக்கல் கார்டு வழங்கப்படும். இந்த கார்டை வைத்து பாஸ்போர்ட், பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் பொருட்கள் எதுவும் இவர்களுக்கு கிடைக்காது. இதற்கு ரூ 100 மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment