கார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க கருப்பு பிலிம் ஒட்டப்படுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு காருக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பெரும்பாலானவற்றில் கருப்பு நிறத்தில் இந்த பிலிம்கள் ஒட்டப்படுகின்றன. இதை சமூகவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் டிரைவர்களுக்கு முன்பின் வரும் வாகனங்கள் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டு விபத்துக்கள் நேரிடுகிறது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ‘இந்தியா முழுவதிலும் மே மாதத்திலிருந்து கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்ட கூடாது. அதை நீக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை சென்னையிலும் இன்று முதல் போலீசார் அமல்படுத்துகின்றனர். அதன்படி முதல் 2 நாட்கள் போலீசார் கார்களை நிறுத்தி கருப்பு பிலிமை நீக்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்ய உள்ளனர். இரண்டு நாட்களுக்கு பிறகும் நீக்காமல் இருந்தால் முதல்கட்டமாக ரூ.100 அபராதம் விதிக்க உள்ளனர். மறுமுறையும் நீக்காமல் பிடிபட்டால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.300 அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விவிஐபிக்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிமில் முன்புறம் பின்புறம் 70 சதவீதம் உள்ளே பார்க்கும் வகையிலும், ஜன்னல் கண்ணாடிகளில் 50 சதவீதம் பார்க்கும் வகையிலும் பிலிம் ஒட்டப்பட்டிருந்தால் அதற்கு எந்தவித தடையும் இல்லை.
No comments:
Post a Comment