Thursday 10 May 2012

30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதிக்காத கிராமம்

சாத்தூர் அருகே உள்ள ஊஞ்சம்பட்டி கிராம மக்கள், 30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதித்ததில்லை. ஆச்சரியமாக உள்ளதா?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது ஊஞ்சம்பட்டி. சுமார் 200 வீடுகள் கொண்ட இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தீப்பெட்டி தயாரிப்பு மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தினர் வசித்தபோதும், ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக, சகோதர உணர்வுடன் வாழ்கின்றனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுகின்றனர். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் இக்கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கின்றனர். ஊர் தலைவர்களை அழைத்துப்பேசி பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்கின்றனர்.
தலைமுறை, தலைமுறையாக இவர்கள் இதே கொள்கைப்பிடிப்புடன் வாழ்கின்றனர். இருந்தபோதும், இக்கிராமம் தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்கு மட்டும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் கிராம மக்கள் இன்றுவரை பெருத்த அவமானமாக நினைத்து, போலீஸ் ஸ்டேஷன் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதுவரை தங்களது ஊரில் திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை பெருமையுடன் கூறுகின்றனர். இங்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இருந்தபோது, கொடி கம்பங்கள் நடுவதற்கு அனுமதி இல்லை. பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவே ஊர் திருவிழாவைக்கூட இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துகின்றனர்.
இதுகுறித்து கிராம பெரியவர் கந்தசாமி(76) கூறுகையில், `ஆரம்ப காலம் முதல் பிரச்னைகளை ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டு தீர்வுகண்டு வருகிறோம். இதே சகிப்புத்தன்மை இன்றுவரை தொடர்கிறது. போலீஸ் ஸ்டேஷன் போவதையே அவமானமாக நினைக்கிறோம். எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் எங்கள் கிராமத்தில் திருட்டு சம்பவம் நடந்ததில்லை. விவாகரத்து பிரச்னையும் வந்ததில்லை’ என்றார்.
கிராமவாசி முருகன் கூறுகையில், `ஊர் பெரியவர்கள் கூறுவதற்கு மதிப்பளித்து இளைஞர்கள் செயல்படுகின்றனர். எங்கள் கிராமம்போல் மற்ற கிராமங்களும் மாற வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment