Thursday, 24 May 2012

கல்வி கடையின் அட்டூழியங்கள்

"ஸ்மார்ட் கிளாஸ்" கட்டணம் செலுத்தாத 50 மாணவர்களுக்கு டி.சி.யை தபாலில் அனுப்பிய திருவில்லிபுத்தூர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
virudhunagar-school-head-master-arrestedவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் கடந்தாண்டு "ஸ்மார்ட் கிளாஸ்" கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ 3 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இதற்கான வகுப்புகள் நடைபெறவில்லை.
மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு டி.சி வழங்குவதாகவும், தேர்வு எழுத விடாமல் நிறுத்திவிடுவதாகவும் தலைமையாசிரியர் மிரட்டினார். இதனால் கொதிப்படைந்த பெற்றோர் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இப்பள்ளி முன்பு கூடி மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார், வருவாய்துறையினர் வந்து பெற்றோரை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வருவாய் அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது மாணவர்களிடம் வசூலித்த ரூ.85 லட்சத்தை திருப்பி தருவதாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார். ஆனால் இதுவரை பெற்றோரிடம் பணத்தை தலைமை ஆசிரியர் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் "ஸ்மார்ட் கிளாஸ்" கட்டணம் செலுத்தாத 50 மாணவர்களுக்கு டி.சி.யை தபால் மூலம் அனுப்பினார். இதனால் பெற்றோர் மீண்டும் கொதிப்படைந்தனர்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மீது வக்கீல் திருமலையப்பன் என்பவர், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், "பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்" நடத்துவதாக வசூலித்த ரூ.85 லட்சத்தை மாணவர்களிடம் திருப்பித்தரவில்லை. மேலும் பணம் கட்டாத மாணவர்களுக்கு டி.சி.யை வழங்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமை ஆசிரியர் ராஜேந்திரனை கைது செய்தனர். இச்சம்பவம் திருவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment