ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற பேஸ்புக் இணையதளத்தின் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
பல்வேறு மதங்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் இணையதளத்தில் இடம் பெறுவதாக கூறி டெல்லியை சேர்ந்த முப்தி அஜாஸ் என்பவர் பேஸ்புக், கூகுள், யாஹூ மற்றும் சில இணையதளங்களுக்கு எதிராக டெல்லி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
பேஸ்புக் இந்தியா இணையதளத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், “பேஸ்புக் இணையதளத்தில் வெளியாகும் கருத்துக்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது. இணையதளத்தின் சர்வர்கள் அமெரிக்காவில் உள்ளது. எனவே, அதை இயக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்திய பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் சேவைகளையும் மட்டுமே வழங்கி வருகிறது. எனவே, வழக்கில் இருந்து எங்கள் நிறுவனத்தை விடுவிக்க வேண்டும்” என்றார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பர்வீன் சிங், வழக்கு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment