Thursday, 31 May 2012

புகையிலையை முற்றிலும் ஒழித்து வழிகாட்டும் கிராம மக்கள்

ஆந்திராவில் ஒரு கிராமத்தினர் புகையிலையை முற்றிலும் ஒழித்து நாட்டுக்கே வழிகாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே மடுகுலா தாலுகாவில் உள்ளது பொங்கலிபகா கிராமம். 1,600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் புகையிலை ஒழிக்க கிராமத் தலைவரும் மக்களும் முடிவு செய்தனர். புகையிலையை ஒழிக்க பாடுபட்டு வரும் இந்திய இயற்கை சுகாதார அறக்கட்டளையும் கிராம மக்களுக்கு ஊக்கம் அளித்தது. இந்த அறக்கட்டளையும் கிராம மக்களும் செய்த முயற்சியால் பொங்கலிபகா கிராமம் இன்று புகையிலை இல்லாத கிராமமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் கிராம மக்கள் யாரும் புகையிலையை பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சிகரெட், புகையிலை, குட்கா போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கவும் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம மக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். மேலும், புகையிலை பொருட்களை விற்க வேண்டாம் என்று கடை உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்த கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையும் நிறுத்தப்பட்டது. அவற்றை விற்று வந்தவர்கள் வேறு பொருட்களை வியாபாரம் செய்ய தொடங்கி விட்டதாக கிராம தலைவர் சத்திய நாராயணா தெரிவித்தார். தொடர்ந்த முயற்சி காரணமாக பொங்கலிபகா கிராமம் புகையிலை இல்லாத கிராமமாக மாறி இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் இந்த மண்டலத்தில் உள்ள மேலும் 10 கிராமங்கள் புகையிலை இல்லாத கிராமமாக மாறும் என்றும் அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று பொங்கலிபகா கிராமம் புகையிலை இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2007ம் ஆண்டுக்கான சுகாதாரம் மற்றும் தூய்மை பராமரிப்புக்காக நிர்மல் கிராம புரஸ்கார் விருதை பொங்கலிபகா கிராமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment