ரூ 5 கோடி லஞ்சமாக பெற்றுக் கொண்டு கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிபதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆந்திரா & கர்நாடகா எல்லையில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் கர்நாடக முன்னாள் அமைச்சர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டிக்கு சொந்தமானது. சுரங்க நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஜனார்த்தன ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜனார்த்தன ரெட்டிக்கு கடந்த 12ம் தேதி ஜாமீன் வழங்கியது.
ஜனார்த்தன ரெட்டிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கியது குறித்து சந்தேகம் அடைந்த சிபிஐ அதிகாரிகள் இது குறித்து விசாரித்தனர். இதில் ஜாமீன் வழங்குவதற்காக ரூ 5 கோடியை சிபிஐ சிறப்பு நீதிபதி பட்டாபி ராமாராவ் லஞ்சமாக வாங்கியிருப்பது தெரிந்தது.
இது குறித்து ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மதன் பி.லோகுரிடம் சிபிஐ புகார் செய்தது. இதையடுத்து, நீதிபதி பட்டாபி ராமாராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்காமல் ஐதராபாத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று ராமாராவுக்கு நிபந்தனை விதித்த நீதிபதி லோகுர் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
லஞ்சமாக வாங்கிய பணம் ராமாராவின் உறவினர்களின் வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டிருப்பதையும் சிபிஐ கண்டு பிடித்துள்ளது. அவற்றில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment