"கொடுமைக்கார மனைவியுடன் எந்த கணவனால் தான் சேர்ந்து முழு மனநிலையுடன் வாழ முடியும்? மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது" என்று ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏ சண்முகத்தின் மகள் ஹேமலதாவுக்கும் வேளச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
பின்னர் கணவன் மீதும் அவரது பெற்றோர்கள் மீதும் ஹேமலதா வரதட்சணை புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த போலீசார் அவரது கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். கோர்ட்டில் நடந்த விசாரணையில் இறுதியாக அந்த கிரிமினல் வழக்கில் இருந்து அவரும் அவரது பெற்றோர்களும் விடுதலையானார்கள்.
கிரிமினல் வழக்கு தொடர்ந்து தன்னை மனைவி சித்ரவதை செய்ததால் தனக்கு விவாகரத்து வழங்க கோரி கணவர் ரமேஷ் குடும்ப நல கோர்ட்டில் கடந்த 2007ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக மனைவி ஹேமலதா மனு தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களை குடும்ப நல கோர்ட் விசாரித்து, விவாகரத்து தர மறுத்துவிட்டது. இருவரும் சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கியது.
இதை எதிர்த்து ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் விசாரித்து, ரமேஷ்க்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். மனைவிக்கு ரூ 2.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என உத்தரவிட்டனர். ரமேஷ் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜரானார்.
மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு கணவன் ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கணவன் மீது மனைவி வரதட்சணை புகார் கொடுத்தார். பின்னர் கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவன் 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அப்படி இருந்தவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் கணவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று மனைவி மனு தாக்கல் செய்தார்.
இப்படி பலவகையில் கணவனை மனைவி கொடுமைப்படுத்தியுள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. சித்ரவதை செய்த மனைவியுடன் எப்படி கணவன் சேர்ந்து வாழ முடியும் என்று குடும்பநல நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. கொடுமைக்கார மனைவியுடன் கணவன் எப்படி சட்டப்படியும் மனநிலையுடனும் சேர்ந்து வாழ முடியும்?
இந்த நீதிமன்றத்திற்கு 2 கேள்வி எழுகிறது. கொடுமைக்கார மனைவியிடம் இருந்து கணவன் விவகாரத்து பெற உரிமையுள்ளதா? சட்டத்தில் வழியுள்ளதா? அதே நேரத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தும் கணவனோடு மீண்டும் சேர்ந்து வாழ மனைவிக்கு உரிமையுள்ளதா?
இதற்கு பதில் பார்க்கும்போது மனைவியின் கோரிக்கையை சட்டப்படி ஏற்க முடியாது. சென்னை குடும்பநல நீதிமன்றம் மனைவியின் கோரிக்கையை ஏற்றது தவறானது. எனவே கணவனுக்கு விவகாரத்து வழங்க மறுத்த உத்தரவையும், மனைவியுடன் சேர்ந்த வாழ வேண்டும் என்று கணவனுக்கு பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்கிறோம். ஒரே தவனையாக மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீரப்பில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment