Tuesday 5 June 2012

டெங்குவை தொடர்ந்து பரவுகிறது சிக்குன் குனியா!

tirunelveli-nagercoil-mosquito-feverதமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் முதலில் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை திருச்சி, கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2,000 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஈடிஸ் என்ற குடும்பத்தை சேர்ந்த எஜிப்டி என்ற கொசு கடிப்பதின் மூலம் தான் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதே கொசுதான், சிக்குன் குனியாவையும் உண்டாக்கக்கூடியது. முன்னெச்சரிக்கையாக ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுக்காததால், இந்த அளவுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தது. தென்மாவட்டங்களில் இன்னும் மக்களிடம் டெங்கு காய்ச்சல் பீதி அடங்கவில்லை. இந்நிலையில், அவர்களில் சிலர் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், சுகாதாரத்துறை சிக்குன் குனியாவையும், டெங்கு காய்ச்சல் கணக்கிலேயே காட்டுகின்றனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது:
தென்மாவட்டத்தில் தொடங்கிய டெங்கு காய்ச்சல், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வந்துவிட்டது. இதனை தடுக்க சுகாதாரத்துறை முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் எஜிப்டி என்ற கொசுதான், சிக்குன் குனியாவையும் உண்டாக்குகிறது. டெங்குக்கும், சிக்குன் குனியா நோய்க்கும் அறிகுறிகளில் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த இரண்டிற்கும் காய்ச்சல், தலைவலி, உடல் வலிதான் இருக்கும். ஆனால், டெங்கு காய்ச்சலில் உடலில் ரத்த போக்கு இருக்கும். சிக்குன் குனியாவில் ரத்த போக்கு இருக்காது. கை, கால்களில் உள்ள மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். கடுமையான வலி இருக்கும். தென்மாவட்டங்களில் சிக்குன் குனியாவினாலும் மக்கள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகுகின்றன. ஆனால், அதனை சுகாதாரத்துறையினர் பதிவு செய்வதில்லை. அது ஏன் என்று சரியாக தெரியவில்லை. டெங்கு, சிக்குன் குனியா மழைக்காலங்களில் தீவிரமடையும். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே எளிதாக தாக்கக்கூடியது. தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டன. அதனால், பொது சுகாதாரம், நகராட்சி, உள்ளாட்சி, பொதுப்பணித்துறை, சமூக நலம் என அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால்தான் டெங்குவையும், சிக்குன் குனியாவையும் முழுமையாக ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2 வகை கொசுக்களும் பகலில் கடிக்கும்
ஈடிஸ் என்ற குடும்பத்தில் எஜிப்டி மற்றும் ஆல்போ பிக்டஸ் என 2 வகை கொசுக்கள் உள்ளன. எஜிப்டி என்ற கொசு டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. இந்த வகையான கொசு வீட்டில் உள்ள நீர்த்தேக்க தொட்டி, தேங்காய் ஓடு, ஏசி, பிரிட்ஜ், டயர், வாளி, ஆட்டுக்கல், பூந்தொட்டி மற்றும் உடைந்த பாத்திரங்களில் தேங்கும் சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி ஆகிறது.
மற்றொரு வகையான பிக்டஸ் என்ற கொசு காடுகள், மலைகள், கற்குவியல், மரபொந்து, ரப்பர் தோட்டம், வாழைத்தோட்டம் போன்ற இடங்களில் முட்டையிட்டு உற்பத்தியாகுகிறது. இந்த பிக்டஸ் கொசு காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்துவிட்டது. திருவனந்தபுரம், ஆலப்புழா, கன்னியாகுமரி மாவட்டம் போன்ற இடங்களில் தற்போது வாழ்ந்து வருகிறது என 2009-ம் ஆண்டே மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்திருந்தது. பிக்டஸ் கொசுவும் டெங்கு மற்றும் சிக்குன் குனியாவை பரப்பக்கூடியது. இந்த இரண்டு வகை கொசுக்களும் பகலில் மட்டுமே மனிதனை கடிக்கக்கூடியது.

No comments:

Post a Comment