Tuesday 29 November 2011

புயல்சின்னம் : மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல்சின்னம் காரணமாக பெய்து வந்த மழை குறைந்தபோதும் பலத்த காற்று எச்சரிக்கை தொடருவதால் குமரி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இடம்பெயர்ந்ததால் குமரி மாவட்டத்தில் நேற்று மழையின் தீவிரம் குறைந்திருந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும், அவ்வப்போது சாரல் மழை தொடருவதுமாக இருந்தது. பிற்பகல் முதல் வெயிலடிக்க துவங்கிவிட்டது. தொடர் மழை காரணமாக மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்றிருந்த மீனவர்களும் கரைதிரும்பிவிட்டனர். நேற்று புயல்சின்னம் மாறி மழையின் தீவிரம் குறைந்தபோதும் கடலோர பகுதிகளில் மணிக்கு 44 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று மீன்வளதுறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இது தொடர்பான அறிவிப்பு நேற்று இரவு வரை அமலில் இருந்தது என்பதால் மீனவர்கள் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கட்டுமரங்கள் கரையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது. குளச்சல் பகுதியிலும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கட்டுமரங்கள் நிறுத்திவிடப்பட்டிருந்தன.
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குளச்சலில் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
மழைக்காலம் துவங்கிய கடந்த 25ம் தேதி அன்று மீனவர்கள் காலையில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. நேற்றும் மீன்பிடிக்க செல்லாததால் 3 வது நாளாக மீன்பிடி தொழில் முடங்கியிருந்தது.
தொடர் மழை காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29.50 அடியாக இருந்தது. அணை க்கு வினாடிக்கு 1146 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 61.20 அடியாக இருந்தது. அணைக்கு 1530 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்&1ல் 5.22 அடியும், சிற்றார்&2ல் 5.31 அடியும் நீர்மட்டம் இருந்தது. பொய்கை அணை நீர்மட்டம் 11.80 அடியாக உயர்ந்தது.
மாவட்டத்தில் பேச்சிப்பாறையில் 20, பெருஞ்சாணியில் 26, சிற்றார்&1ல் 12, நாகர்கோவிலில் 15, பூதப்பாண்டியில் 27.4, சுருளோட்டில் 25.4, கன்னிமாரில் 18.4, குளச்சலில் 68, அடையாமடையில் 43, கோழிப்போர்விளை 26, திருவட்டார் 90, முள்ளங்கினாவிளை 36.2 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. இதற்கிடையே மழையால் சேதமடைந்த படகுகள், இடிந்து விழுந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளில் வருவாய்துறை, மீன்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி : தினகரன் Nov 29

No comments:

Post a Comment