Tuesday, 29 November 2011

கடலோர காவல்படை மனு : மீனவர்களிடையே கொந்தளிப்பு


இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை தாக்குவது தொடர் கதையாகியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இந்திய கடலோர காவல் படை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கின்றனர்.
இலங்கை கடல் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். என குறிப்பிட்டது. இதை ஏற்காத ஐகோர்ட், தனது தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
மேலும், கடலோர காவல் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாட்டின் பாதுகாப்பு கருதி, குஜராத் & பாகிஸ்தான் எல்லையில் மீன்பிடி இல்லா மண்டலம் உருவாக்கப்பட்டு இருப்பதை போல், தமிழக & இலங்கை கடற்பகுதியை மீன்பிடி இல்லா மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடலோர காவல் படை தாக்கல் செய்துள்ள இம்மனுவை திரும்ப பெற வலியுறுத்தி, ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு மீனவர் நலச்சங்க ஆலோசகரும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவருமான தேவதாஸ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மீனவர் நலச்சங்க பொதுச்செயலாளர் போஸ், ராமேஸ்வரம் மீனவர் நலச்சங்கத்தலைவர் எமரிட் உள்பட 13 மீனவர் சங்க பிரதிநிதிகள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேவதாஸ் கூறுகையில், “உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்திய கடலோர காவல் படை தாக்கல் செய்த மனு தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலோர காவல் படையின் இச்செயல்பாடு, இலங்கை ராணுவத்துக்கு சாமரம் வீசுவது போல் உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் கடலோர காவல் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் மீனவர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
நன்றி : தினகரன் Nov 29

No comments:

Post a Comment