Friday, 2 December 2011

கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி : நாளை 10 நாள் திருவிழா

சவேரியார் ஆலய 9ம் நாள் திருவிழாவையொட்டி இன்று மாலை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இன்று இரவும் தேரோட்டம் நடக்கிறது. 10 நாள் திருவிழா நாளை நிறைவடைகிறது.
பிரசித்தி பெற்ற நாகர்கோவில் கோட்டாறு கேட்டவரும் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத் திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 8ம் நாள் திருவிழாவான நேற்று (1&ந்தேதி) இரவு தேர் பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனி தெற்கு தெரு, கம்போளம், ரயில்வே ரோடு, கோட்டாறு மெயின் ரோடு, வடக்கு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை அடைந்தது. தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். தரையில் விழுந்து வணங்கி நேர்ச்சை கடன் நிறைவேற்றினர்.
இன்று (டிச.2) 9ம் நாள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கின்றன. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொள்கிறார். மேலும் இதில் குமரி மாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இன்று மாலை முதல் விடிய விடிய ஆலயத்துக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
நாளை (டிச.3) 10ம் நாள் திருவிழா நடக்கிறது. காலை 6 மணிக்கு தூய சவேரியார் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை வகிக்கிறார். பின்னர் காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நாளை (3 - ம் தேதி) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.
குமரி மாவட்ட எஸ்.பி. லெட்சுமி, உத்தரவின் பேரில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படை, பள்ளி மாணவர்களும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணியில் ஈடுபடுகிறார்கள். திருவிழாவையொட்டி கோட்டாறு போலீஸ் நிலைய ரோட்டில் இருந்து சவேரியார் ஆலய ரோடு வரை சாலையின் இரு பக்கமும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment