Friday, 2 December 2011

நாகர்கோவில் : தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி : 37 மாணவ, மாணவிகள் காயம்

இன்று காலை கோர விபத்து : அச்சு முறிந்து பஸ் கவிழ்ந்தது
(2.11.11) நாகர்கோவிலில் இன்று காலை தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து, பஸ்சில் இருந்த 37 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். முன்னதாக பஸ் மோதியதில் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை சுசீந்திரம், தெங்கம்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. நாகர்கோவில் நாக்கால்மடம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதியது. இதில் அவர் தூக்கிய எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் மீது மோதிய பின்னரும் நிற்காமல் சென்ற பஸ் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. பஸ்சின் பின்பக்க டயர்கள் இரண்டும் பட்டையோடு கழன்று ஓடியது. பைக்கும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் வடசேரி மற்றும் ஆரல்வாய்மொழியில் இருந்து போலீசார் விரைந்தனர். இறந்து போனவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 37 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் மதுமதி சந்தித்து விபத்து பற்றி கேட்டறிந்தார். விபத்தில் பலியானவர் பெயர் முத்து, நெல்லை மாவட்டம் வடுகூர்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் குமரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், போக்குவரத்து பிரிவு மேலாளராக உள்ளார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய பஸ் டிரைவர் கார்த்திகேயன் ஆரல்வாய்மொழி போலீசில் சரண் அடைந்தார். மாணவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் அவர்களின் பெற்றோர் பதறியடித்தபடி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பஸ் கவிழ்ந்ததில் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்து டீசலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் கல்லுரி மாணவ, மாணவிகள் கொண்டு வந்த டிபன் பாக்ஸ்கள், புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. அந்த பகுதி முழுவதுமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த விபத்தால் நாகர்கோவில் & ஆரல்வாய்மொழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.     (Tamil Murasu)

No comments:

Post a Comment