Sunday 11 December 2011

உஷார்!!! பரவுது எலி காய்ச்சல் : தடுக்க என்ன வழி?

சமீபத்தில் சென்னை யில் பெய்த கன மழையால் நகரின் எல்லா சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழை நின்று 10 நாட்கள் ஆன பிறகும் பல சாலைகளில் இன்னும் மழைநீர் வடிந்தபாடில்லை.
பலத்த மழையால் கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் எங்கும் துர்நாற்றம்... இது போதாதென்று மாநகராட்சியினர் சரிவர குப்பை களை அள்ளாததால் அவைகளும் மழை நீருடன் கை கோர்த்து கொண்டது. இதனால், பொதுமக்களுக்கு தோல் அரிப்பு, சேற்றுப் புண் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
விளைவு... காய்ச்சல்... வயிற்று வலி... வயிற்று போக்கு என பல உடல் உபாதைகள் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரிசுகள் வரை மருத்துவமனையில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். கடந்த 15 நாளாக நகரில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் ஹவுஸ் புல். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்கள் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நகரில் தற்போது எலிக் காய்ச்சல் பரவி வருகிறது. கிட்டத்திட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு இந்த காய்ச்சல் வந்துள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

[  தடுக்க என்ன வழி?
* வெளியே சென்று வந்ததும் கை கால்களை சோப்பு அல்லது கிருமி நாசின் கொண்டு கழுவவும்.
** மழை காலங்களில் வெளியே செல்லும் போது கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம்.
*** காய்ச்சிய தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
**** வெளியே திறந்த வெளியில் விற்கும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.]
எலிக்காய்சல் எப்படி வருகிறது. அதற்கான அறிகுறிகள் என்ன... இது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து பொது நல மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணனை சந்தித்தோம். அவர் கூறியதாவது:
எலிக்காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. நோய்வாய்ப்பட்ட எலிகள்... தேங்கி யிருக்கும் சாக்கடை நீர் மற்றும் மழைநீரில் சிறுநீர்கழிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து விடுகிறது.
இதுபோன்று, எலியின் பாக்டீரியாக்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். சாலையில் நடக்கும் மனிதர்களின் கால்களின் விரல்கள் வழியாக ரத்தத்தில் மிக எளிதாக கலந்து விடும். உடலுக்கு செல்லும் பாக்டீரியாக்கள் முதலில் கல்லீரலுக்கு சென்று, அதன் செயல்திறனை செயல் இழக்கச் செய்கிறது.
எலிக்காய்ச்சல், சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் மட்டுமே பரவுவதில்லை. அந்த தண்ணீரில் நடப்பதாலும் அல்லது செல்லப்பிராணிகள் மூலமாகவும் பரவும். காரணம் இது ஒரு தொற்று நோய். செல்லப் பிராணிகளின் உடலில் பாக்டீரியா கிருமிகள் இருந்தாலும் அவற்றை நாம் வருடுவதாலும் இந்த நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் தாக்கினால் முதலில் காய்ச்சல், பிறகு வாந்தி, உடல் வலி, மூட்டு வலி ஏற்படும். காய்ச்சல் ஒரு வாரத்துக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்வது அவசியம். இல்லை என்றால் இந்த நோய் மஞ்சள் காமாலை நோய் போல் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும். இந்த நோயை பொறுத்தவரை இதற்கு என தனி தடுப்பூசி கிடையாது. காய்ச்சல் குறையவும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.   (Dinakaran)

No comments:

Post a Comment