Sunday 11 December 2011

உரம் பதுக்கலை தடுக்க புதிய திட்டம் : ஜனவரி 1ம் தேதி முதல் அமல்

எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
மாநிலங்களில் தட்டுபாடின்றி உரம் கிடைப்பதற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் போதிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
ஆனாலும் பல இடங்களில் உரம் பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது, அதிகவிலைக்கு விற்பது போன்றவை நடக்கிறது. தற்போது விவசாயிகளுக்கு எளிதில் உரம் கிடைப்பதை உறுதி செய்யவும், கிடங்கு வாரியாக உரம் இருப்பு நிலவரத்தை கண்காணிக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு உரவிற்பனையகங்கள் உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு தேவை யான உரங்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் புதிய உரவினியோக திட்டத்தின்படி அரசு கூட்டுறவு உரவிற்பனையகம் மற்றும் தனியார் உர விற்பனை யகங்களில் செல்போன் மூலம் உரம் கண்காணிப்பு திட்டம்(மொபைல் பேஸ்டு பெர்டிலைசர் மானிட்டரிங் சிஸ்டம்) வரும் 2012 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் உர விற்பனையகங்களில் உள்ள இருப்புகள் மற்றும் அந்த உரவிற்பனை நிறுவனங்கள் வாங்கும் உரங்களின் அளவு ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இதற்காக மத்திய அரசு சார்பில் மாவட்ட வாரியாக உரவிற்பனை யாளர்களுக்கு கடந்த மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாவட்ட தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் ஜாகிர் நவாஷ் கூறியதாவது: தனியார் துறைகளுடன் சேர்ந்து அரசு இந்த திட்டத்தை செயல் படுத்த உள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். உதாரணமாக, தூத்துக்குடியில் உள்ள உரஆலையில் இருந்து கோவையை சேர்ந்த ஒரு மொத்த உரவிற்பனை யாள ருக்கு 10 டன் உரம் விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி உர ஆலையை சேர்ந்தவர் உரத்தை, மொத்த வியா பாரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அதுகுறித்து எம்எப்எம்எஸ் மூலம் முன்கூட்டியே தகவல் அனுப்புவார். தகவல் கிடைத்தவுடன் வியாபாரி பதில் தகவல் அனுப்புவார். சில்லரை விற்பனையாளரிடம் உரம் விற்பனை செய்யும் போதும் இதே போல் தகவல் பரிமாறப்படும். இந்த தகவல் பரிமாற்றம் முழுவதும் வேளாண் துறை அலுவலகத்தில் உள்ள எம்எப்எம்எஸ் இணை யதளத்தில் பதிவாகிவிடும். இதன் மூலம் உரவிற்பனையாளர்கள் உரத்தை பதுக்க முடியாது.
இவ்வாறு ஜாகிர் நவாஷ் கூறினார்.

No comments:

Post a Comment