Sunday, 11 December 2011

"ஓட்டு கேட்டு வந்தபோது திரும்பிக்கூட பார்க்கல" - தொழிலாளர்கள் அதிர்ச்சி

தொழிற்சங்க மாநில மாநாட்டில் அமைச்சர்கள் பேசுகையில், "ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க வேண்டும்"; "ஓட்டு கேட்டு வந்தபோது திரும்பியே பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டதால், தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் ஐக்கிய சங்கம் சார்பில், மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
தொழிலாளர் மாநாடு என்றதுமே கலந்து கொள்ளலாமா என்று தயங்கினேன். ஏனெனில், என்னென்ன கேட்பீர்கள் என்பது தெரியும். உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றோ; இந்த கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்றோ, இங்கேயே என்னால் கூற முடியாது. மேலும், சில விஷயங்களை மேடையில் பேசவும் முடியாது. எதையும் எதிர்மறையாக செய்யமாட்டோம் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை அல்ல. மின்வாரியத்தின் நிதி நிலை சீரடையும்போது, நிதியாதாரங்கள் சரியாகும்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
"ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க வேண்டும்" என்று பழமொழி சொல்வார்கள். அதுபோல நிதிநிலை சரியாகும் வரை பொறுமை காக்க வேண்டும். "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" என்று சொல்வார்கள்.
"இங்கே தாமதிக்கப்படுவது வழங்குவதற்காகத்தான்" என்று புரிந்து கொள்ள வேண்டும். மின் உற்பத்தியில் தமிழ்நாடு மிகை மாநிலமாக திகழ தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
எனது பேச்சு தொழிலாளர்களுக்கு திருப்தியளித்ததா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு எனது பேச்சு ஏமாற்றமே. பின்னால் நடக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
முன்னதாக, சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் பேசுகையில், சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வுகளை தாமதிக்காமல் வழங்க வேண்டும் போன்ற 9 கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
ஆனால், இந்த கோரிக்கைகள் எதற்குமே அமைச்சர் பதிலளிக்காமல், கோரிக்கைகள் குறித்து எதுவுமே தெரிவிக்க இயலாது என்று கூறியதோடு, அவசரமாக திருச்சிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு, பேசியதுமே விழா அரங்கிலிருந்து புறப்பட்டும் சென்று விட்டார்.
"கோரிக்கைகளுக்கு ஏதேனும் விடை கிடைக்காதா" என்று ஆவலோடு வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். மேலும், மின்துறை அமைச்சர்தான் இப்படி பேசிவிட்டு சென்று விட்டார்.
தொழிலாளர் துறை அமைச்சராவது நமக்கு ஆறுதலாக பேசுவாரா என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் பேசுகையில், “மின்வாரிய தொழிலாளர்களை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், தொழிலாளர்கள்தான் எங்களை புரிந்து கொள்ளவில்லை. எனது தொகுதியான தூத்துக்குடியில் அனல் மின்நிலைய குடியிருப்பில் ஓட்டு கேட்டு சென்றபோது, அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் மீது உங்களுக்கு பற்று இல்லை. உங்கள் மீது எங்களுக்கு பற்று உண்டு” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே தொழிலாளர்கள் சென்றனர். இரண்டு அமைச்சர்கள் வந்தும் ஒரு தீர்வும் இல்லை யே என்ற நிலையில், மாநாட்டு அரங்கில் இருந்து தொழிலாளர்கள் வேதனையுடன் வெளி யேறினர்.                  (Dinakaran)

No comments:

Post a Comment