பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் தன் உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றினார் அரசு பஸ் டிரைவர். அவரது தியாகத்தை போற்றும் வகையில் விபத்தில் காயமடைந்த பேராசிரியர் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் வழங்கினார்.
தஞ்சை அமிர்தம் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியர். மனைவியோடு கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 14 ம¢ தேதி சென்னையில் இருந்து தஞ்சைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அதிகாலை 5 மணிக்கு கும்பகோணத்தை அடுத்த சேங்கனூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரியை முந்தமுயன்றபோது ஆம்னி பஸ் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் வெங்கட்ராமன், அவரது மனைவி, அரசு பஸ் டிரைவர் வசந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மூவரையும் கும்ப கோணம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்த்த பிறகு தான் வெங்கட்ராமனுக்கு நினைவு வந்தது. அப்போது அருகில் உள்ள பெட்டில் பார்த்தபோது டிரைவர் வசந்தன் இறந்து கிடந்தார்.
ஆம்னி பஸ்சில் வந்தவர்களும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், ‘அரசு பஸ்சை ஓட்டி வந்த வசந்தனும் வேகமாக ஓட்டியிருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு அதிகமாகி இருக்கும். டிரைவர் வசந்தன் தன் உயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றி உள்ளார். அவரால் தான் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள்’ என கூறினர்.
விபத்து தொடர்பாக இழப்பீடு கோரி வெங்கட்ராமன் தொடர்ந்த வழக்கில், 5 மாதங்களுக்கு முன்பு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. பத்து லட்சத்தில் இவர் பெரும் தொகையை மருத்துவ செலவிற்கு பயன்படுத்தினார். இருந்தா லும் தன்னுடைய உயிரை காப்பாற்றிய டிரைவர் வசந்தன் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் வழங்க முடிவு செய்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதன்படி குடியரசு தினமான நேற்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேலாண் இயக்குநர் பாண்டியன், பொது மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வெங்கட்ராமன் அளித்த ரூ.1.5 லட்சத்தை வசந்தனின் மனைவியிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment