Tuesday 24 January 2012

மீனவர்களுக்கு 2013 மார்ச்க்குள் அடையாள அட்டை

அன்னிய ஊடுருவலை தடுப்பதற்காக 12 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
கடலோர வாழ்மக்களுக்கான தேசிய அடை யாள அட்டை வழங்கும் விழா மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் கிராமத்தில் நேற்று நடந்தது. விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்டிபுலம் மீனவ கிராம மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:
2008ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியர்களுக்கும், அன்னியர்களுக்கும் உள்ள பாகுபாட்டை தகவல் தொழிற்நுட்ப வசதி மூலம் அறிந்துகொள்ளும் வகையில் தேசிய அடை யாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது.
அதில், ஒரு கட்டமாக கடலோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதலில் வழங்க முடிவெடுத்து, 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 12 கடலோர மாவட்டங்களில் உள்ள 229 கடற்கரை கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இங்குள்ள 1 கோடியே 20 லட்சம் பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட 11 லட்சத்து 77 ஆயிரத்து 860 பேரின் புகைபடம், கைரேகை, கருவிழி ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணி அடுத்த ஆண்டு 2013 மார்ச் மாதம் முடிவடையும். அடையாள அட்டை மூலம் இந்தியாவுக்குள் அன்னிய சக்தி ஊடுருவலை தடுக்க முடியும். அரசின் சலுகை, உரிமைகளையும் பெற முடியும். இவ்வாறு சிதம்பரம் பேசினார். விழாவில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் சந்திரமவுலி, தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment