Saturday 21 January 2012

கார்டுகளை புதுப்பிக்க ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடை இயங்கும்


குடும்ப அட்டையை புதுப்பிக்க வசதியாக, நான்கு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் முடிவடைய காலஅவகாசம் தேவை என்பதால் பழைய ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ரேஷன் கார்டில் உள்ள காலி பக்கத்தில் 2012&ம் ஆண்டுக்கான சீல் போடப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டை புதுப்பிக்க பிப்ரவரி 28&ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் பகலில் வேலைக்கு சென்றுவிடுவதால் கார்டை புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் அட்டை புதுப்பிக்கும் பணி நடக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:
அரசு மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், வேலை நாட்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று கார்டுகளை புதுப்பிக்க இயலவில்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தனர். எனவே, அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய ரேஷன் கார்டுகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக, நாளை (22&ம் தேதி) மற்றும் ஜனவரி 29, பிப்ரவரி 5, 12, ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரேஷன் அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் பொருள்கள் வழங்கும் பணியை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக வரும் 23, 30 மற்றும் பிப்ரவரி 6, 13, தேதிகளில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment