Saturday 21 January 2012

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகரிப்பு

இந்திய பெண்களில் 66 சதவீதம் பேர், கருக்கலைப்பு செய்வதில் பாதுகாப்பற்ற முறைகளை பின்பற்றி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு செய்யும் பெண்கள் குறித்து நியூயார்க்கில் உள்ள "கட்மச்சர்" என்ற ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
** இந்தியாவில் 2003-ம் ஆண்டு 4 கோடியே 16 லட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்தனர். 2008-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சமாக அதிகரித்துள்ளது.
** பாதுகாப்பற்ற முறையிலான கருக்கலைப்பு சதவீதமும் 1995-ம் ஆண்டு 44 சதவீதமாக இருந்தது 2008-ம் ஆண்டு 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
** பிரசவம் நேரத்தில் ஏற்படும் உயிரிழப்பில் 13 சதவீதம், பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழ்கிறது.
அப்போது, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளில் 2008-ம் ஆண்டு மட்டும் ஒரு கோடியே 5 லட்சம் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொண்டது தெரிய வந்தது. அவர்களில், 65 லட்சம் பேர் இந்திய பெண்கள்.
இந்தியாவில் கருக்கலைப்பு செய்து கொள்ள பாதுகாப்பான சட்ட விதிகள் உள்ளன. எனினும், 66 சதவீதம் பெண்கள். அதாவது மூன்றில் இரண்டு பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளிலேயே ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு விகிதம் 6 லட்சம் வரை குறைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 28 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இதுபோல, சர்வதேச ரீதியாக பாதுகாப்பற்ற வழிகளில் கருக்கலைப்பு செய்வதும் ஆண்டுதோறும் உயர்கிறது. 1995-ம் ஆண்டில் சராசரியாக 44 சதவீதமாக இருந்தது, 2008-ம் ஆண்டில் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் கருக்கலைப்பு செய்யும் பெண்களில் ஒரு லட்சம் பேருக்கு 200 பேர் மரணத்தை தழுவுகின்றனர் என்ற தகவலையும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எனவே, "இந்தியாவின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை விரிவான அளவில் பிரசாரம் செய்வதும், பாதுகாப்பான கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உடனடி அவசியம்" என்று கட்மச்சர் ஆய்வு நிறுவன டாக்டர் கில்டா கூறியுள்ளார். (Dinakaran)

No comments:

Post a Comment