சில்லரை தட்டுப்பாட்டில் சிக்கி தவித்த மும்பை வியாபாரிகள் பலர் ஒன்றிணைந்து தங்களுக்குள் பரிமாற்றம் செய்ய நாணயங்களை தயாரித்து கொள்கின்றனர்.
மும்பையின் மாந்வி &கொலிவாத் வர்த்தகர் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் சில்லரை தட்டுப்பாட்டில் தவிக்கின்றனர். 1, 2, 5 ரூபாய் நாணயங்களை கள்ளச் சந்தையில் அதாவது, கூடுதல் பணம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. 100 ஒரு ரூபாய் நாணயத்தை ரூ 114-க்கு வாங்கினர். 14 ரூபாய் கமிஷன். இதுவே 50 இரண்டு ரூபாய்க்கு ரூ 15 என்றும், 20 ஐந்து ரூபாய்க்கு ரூ 18 என்றும் கமிஷன் தரப்பட்டு வந்தது. தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் கமிஷன் 25 ரூபாயை தொடும்.
அப்படியும் சில்லரை பற்றாக்குறை ஏற்பட்டதால் சங்கத்தின் சார்பில் 1, 2, 5 ரூபாய் நாணயங்களை தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்ளும் வகையில் அச்சிட முடிவு செய்தனர். அதன்படி அச்சிடப்படும் நாணயத்தின் ஒரு பக்கத்தில் சங்கத்தின் லோகோ எம்கேவி என்றிருக்கிறது. மறுபக்கம், ரூபாய் மதிப்பு இடம்பெறுகிறது. இதுவரை 50,000 நாணயங்களை அச்சிட்டு தங்களுக்குள் வியாபாரிகள் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
இதுபற்றி மளிகை கடையை சேர்ந்த அஸ்லம் ஷேக் கூறுகையில், “இது ரிசர்வ் வங்கி நாணயத்தை போல் தயாரிக்கப்படும் கள்ள நாணயம் அல்ல என்பதால் சட்ட விரோதம் கிடையாது. எங்களுக்குள் மட்டும் இது இடம் மாறுவதால் பிரச்னை ஏற்படாது” என்றார்.
புத்தம் புதிதாக அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் வியாபாரிகள் கையில் பளபளக்கும் நிலையில் இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி ரிசர்வ் வங்கிக்கு தகவல் சென்றதாக தெரியவில்லை.
No comments:
Post a Comment