முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது
"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது" என்று கேரள அமைச்சர் கே.பாபு கூறினார்.
கேரள மீன் வளத்துறை அமைச்சர் கே.பாபு சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
இந்திய சர்வதேச மீன் கண்காட்சி, கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதில், 75 இந்திய நிறுவனங்கள், 5 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 105 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100 அரிய வகையான மீன்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. இவ்வாறு அமைச்சர் கே.பாபு கூறினார். கேரள மீன் வளத்துறை இயக்குனர் சி.ஏ.லதா உடன் இருந்தார்.
பின்னர், அமைச்சரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேவையான தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. எவ்வளவு தண்ணீர் கொடுப்பது என்பது பிரச்னை இல்லை, எங்கள் பாதுகாப்பு தான் முக்கியம்.பழைய தொழில்நுட்பத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப் பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கேரள அரசு தெளிவாக உள்ளது. அணை பாதுகாப்பாக உள்ளது என்ற மத்திய நிபுணர் குழுவினர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அணை உடைந்தால் கேரளாவில் 5 மாவட்டங்களில் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment