Wednesday 25 January 2012

ஆசாரிபள்ளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : கலெக்டர் நேரடி நடவடிக்கை

அதிகாரிகளை ஒருமையில் திட்டிய அதிமுக எம்எல்ஏ
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கில் ஆக்ரமிப்புகளை அகற்ற கடந்த 2010ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தாசில்தார் ராபர்ட்புரூஸ் தலைமையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு பொறியாளர் லூயிஸ், அருள்செழியன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக கவுன்சிலர் ராஜாசிங், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மலவிளை பாசி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றுவதற்காக மின்இணைப்புகளை துண்டித்தனர். அப்போது அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் அங்கு வந்து அதிகாரிகளை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடியாக வழங்கக்கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் மின்இணைப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் நாகராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாரபட்சமின்றி அனைத்து ஆக்ரமிப்புகளையும் யார் சொன்னாலும் கேட்காமல் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து ஆக்ரமிப்பு அகற்றும் பணி மீண்டும் துவக்கப்பட்டது. டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே தாசில்தார் தலைமையில் சென்ற அதிகாரிகளை எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஒருமையில் திட்டியது அரசு அதிகாரிகளை ஆத்திரமடைய செய்துள்ளது.  (Tamil Murasu)

No comments:

Post a Comment