Friday 13 January 2012

கன்னியாகுமரியில் சுற்றுலாபயணிகளுக்கு விரைவில் திறப்பு ஒலி ஒளி காட்சிக்கூடம்


ராட்சத விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இவை செயல்படத் தொடங்கும் என்று இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி அய்யாத்துரை தெரிவித்தார்.
கன்னியாகுமரி வருகை தரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. காட்சி கூடத்தில் அமைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இருக்கைகள்.
பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து கொள்ள வசதியாக ஒலி ஒளி காட்சி கூடம் அமைக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகமும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் முடிவு செய்தது.
அதன்படி மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் சார்பில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்க ரூ 2 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக வளாகத்தில் இதற்கென ஒரு தளம் அமைக்கப்பட்டு 300 சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் இந்த ஒலி ஒளி காட்சியை கண்டு களிக்கும் படி காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12 இருக்கைகள் முக்கிய விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒலி ஒளி காட்சிக்கூடத்தில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, திருவள்ளுவர், திருக்குறள், பகவதி அம்மன் கோயில், அம்மன் வரலாறு, திருவிழா பற்றிய காட்சிகள், புனித அலங்கார உபகாரமாதா திருத்தலம் பற்றிய காட்சிகள் ஆகியவை இடம்பெறுகிறது.
இதற்காக பிரம்மாண்ட திரை ஒன்று கட்டப்பட்டு அதில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் இந்த திரையில் அந்த காட்சிகளை கண்டு களிக்கும் அதே வேளையில் அந்த காட்சிகளைப் பற்றிய விளக்கங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் ஒலியாக கேட்கும். இதற்காக பிரம்மாண்ட ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒலி ஒளி காட்சிகளை இயக்குவதற்காக ஒரு கண்ட்ரோல் ரூம் மற்றும் ஒரு பெரிய புரொஜக்டர் நிறுவப் பட்டுள்ளது. ஒலி ஒளிக்கான காட்சிகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு புரொஜக்டருடன் இணைக்கப் படும். கம்ப்யூட்டரிலிருந்து வெளியாகும் இந்த ஒலி ஒளி காட்சி புரொஜக்டர் மூலம் திரைக்கு அனுப் பப்பட்டு அங்கு காட்சிகள் பிரதிபலிக்கும்.
தவிர ஒரு சில காட்சிகளுக்காக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு ஒளியை பாய்ச்சுவதற்காக பிரம்மாண்டமான விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியை கரையில் இருந்து வர்ண ஜாலத்தில் கண்டுகளிக்க முடியும். அப்போது அது சார்ந்த செய்திகள் ஒலி பெருக்கியில் ஒலிக்க விடப்படும்.
இதற்காக கேபிள்கள், மின்விளக்குகள், ஒலி பெருக்கிகள், கட்டுப்பாட்டு அறை, ஒலி ஒளி காட்சிகளை காண்பிக்க தேவையான எலக்ட்ரிக்கல் வேலைகள், அதற்கான உபகரணங்கள் நிறுவும் பணிகள் முடிவடைந்துவிட்டன. சுற்றுலா தலங்கள் பற்றிய செய்திகள் இடம்பெற உள்ளதால் சுற்றுலாப் பயணிகளிடையே இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒலி ஒளி காட்சிக் கூடத்தை எந்த துறை நிர்வகித்து நடத்தும் என்பது இன்னும் முடிவு செய்யப் படவில்லை என்றாலும், சுற்றுலாத்துறையிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது. விரை வில் இந்த ஒலி ஒளி காட்சிக்கூடம் திறந்து வைக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு திறக்கப் படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே அந்தமான் தீவில் இதே போல் ஒலி ஒளி காட்சிக்கூடத்தை இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உருவாக்கியது. அது சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  (Dinakaran)

No comments:

Post a Comment