Friday, 13 January 2012

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் : அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

மத்திய அரசின் சிறப்பு அதிகாரி எச்சரிக்கை
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தமிழக சிறப்பு அதிகாரி ஹென்றி திபேன் கூறினார்.
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர் பான விளக்க கருத்தரங்கம் நாகர்கோவிலில் நேற்று (12-ம்தேதி) நடந்தது. ஹீல் தொண்டு நிறுவன இயக்குநர் சிலுவை வஸ்தியான் தலைமை வகித்தார். மக்கள் கண்காணிப்பக இயக்க மாநில இயக்குநர் ராசன் வரவேற்றார்.
இதில் தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தமிழ்நாடு கல்வி உரிமை சட்ட சிறப்பு பிரதிநிதி ஹென்றி திபேன் பேசியதாவது:
குழந்தைகளுக்கான கட்டாய கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இந்தியா முழுவதும் பொருந்தும். இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயது வரை உள்ள ஏழ்மை நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், தனது பகுதியில் உள்ள பள்ளியில் தொடக்க கல்வி முடியும் வரை இலவசமாக கட்டாய கல்வி பெறுவதற்கு உரிமை உண்டு. மாற்று திறனுடைய குழந்தைகளும், இலவச கட்டாய தொடக்க கல்வி பெற முடியும்.
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடுப் படி குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தனது பகுதியில் உள்ள நலிந்த பிரிவுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தொடக்க கல்வி முடியும் வரை இலவச கட்டாய கல்வியை வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், இலவச கல்வியில் சேர்க்கப்படும் குழந்தையின் பெற்றோரிடம் இருந்தோ, பாதுகாவலரிடம் இருந்தோ எந்தவொரு கல்வி கட்டணமும் வசூலிக்க கூடாது.
குழந்தையை எந்தவொரு முன் தேர்வு நடைமுறைக்கும் உட்படுத்த கூடாது. அப்படி கல்வி கட்டணம் வசூலித்தால் வசூல் கட்டணத்தை போல் 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். குழந்தையை தேர்வு நடைமுறைக்கு உட்படுத்தப்படும் போது, முதல் தடவையாக இருந்தால் ரூ.25 ஆயிரமும், மீண்டும், மீண்டும் இருந்தால் ஒவ்வொரு முறையும் ரூ.50 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும்.
ஒரு பள்ளியில் சேர்க்கப்படும் எந்தவொரு குழந்தையும் தொடக்க கல்வி முடியும் வரை தோல்வி என்ற பெயரில் ஒரே வகுப்பில் இருக்க வைக்கவோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது. இந்த சட்டம் தொடர்பாக மாநிலம் வாரியாக மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க மாவட்டம் வாரியாக 20 பேர் கொண்ட பள்ளி நிர்வாக குழு அமைக்கப்படும்.
தொண்டு நிறுவனம், கல்வி ஆர்வலர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் இக்குழுவில் இடம் பெறுவார்கள். தமிழகத்தில் சில பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கு இப்போதே மாணவர் சேர்க்கையை முடித்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்குமாறு தமிழக பள்ளி கல்வித்துறை செயலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் பொன்னீலன், தமுமுக மாவட்டத்தலைவர் பீர்முகமது, நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் ஸ்ரீராம், மாஸ்டர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் நயினார், சுரேஷ் காணி, எட்வின், மனித உரிமை கல்வி நிறுவன பொறுப்பாளர் செல்ல பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். (Dinakaran)

No comments:

Post a Comment