Wednesday 1 February 2012

நாளை முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இதில், சுமார் 3 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகின்றன. தேர்வுக்கு முன்னதாக செய்முறை தேர்வுகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த சுமார் 3 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால், அங்கு ஒரு தேர்வு மையம் அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பேரில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், செய்முறைத் தேர்வுக்கான மையங்களை அமைக்கின்றனர்.
தற்போதுள்ள நடைமுறையின் படி, செய்முறைகள் உள்ள பாடங்களில் எழுத்துத் தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 150 மதிப்பெண்களில் 30 மதிப்பெண்களும், செய்முறை தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்களும் எடுத்தால் தான் தேர்ச்சி பெறுவார்கள். அப்படி எடுக்காவிட்டால் அவர்கள் அந்த பாடத்தில் தோல்வி அடைந்தவர்களாக கருதப்படுவார்கள்.
கடந்த தேர்வில் செய்முறை தேர்வில் 50க்கு 40 மதிப்பெண்கள் எடுக்காத தனித் தேர்வர்கள், இப்போது நடக்கும் செய்முறை தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். செய்முறை தேர்வு எழுத விரும்பாத தனித் தேர்வர்கள் அதற்கான சான்றுகளை செய்முறை தேர்வு மைய அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். செய்முறை தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் எழுத வேண்டும்.

No comments:

Post a Comment