Wednesday, 1 February 2012

திருமணம் ஓகே... குழந்தை கூடாது : நக்சலைட்கள் நிபந்தனையாம்!!!

சட்டீஸ்கர் மாநில நக்சல் இயக்கத்தில் திருமணம் செய்யும் ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், கன்கர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று 7 நக்சலைட்கள் சரணடைந்தனர். இவர்களில் 6 பேர் தம்பதியினர். மற்றொருவர் திருமணம் ஆகாத பெண். சுனில் குமார் மத்லம் & அவருடைய மனைவி ஜெய்னி என்கிற ஜெயந்தி, ராம்தாஸ் & அவருடைய மனைவி பானிதோபிர் என்கிற சுசீலா, ஜெய்லால் & அவருடைய மனைவி அஸ்மானி என்கிற சானே மற்றும் சமோ மாந்த்வி ஆகியோர் சரணடைந்தனர்.
தனது இயக்கத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றி மத்லம் (31) கூறியதாவது:
கன்கர் மாவட்டத்தில் உள்ள புப்கான் கிராமம்தான் எனது சொந்த ஊர். எனது 17 வயதில் நக்சலைட்கள் என்னை வலுக்கட்டாயமாக காட்டுக்குள் இழுத்துச் சென்று, தங்கள் இயக்கத்தில் சேர்ந்தனர். நக்சலைட் கமாண்டராக இருந்த ஜெயந்தியை சந்தித்ததும் காதலில் விழுந்தேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நக்சல் இயக்க தலைவர்களிடம் கூறினோம். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், திருமணத்துக்கு முன்பாக வாசக்டமி என்ற குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை செய்யும்படி எனக்கு நிபந்தனை விதித்தனர். வேறு வழியின்றி, நான் அதை செய்தேன். திருமணமாகி குழந்தைகள் பிறந்தால், அவர்களை நல்லபடியாக வளர்ப்பதற்காக நக்சலைட் தம்பதிகள் தங்கள் கிராமத்துக்கு சென்று விட்டால் நக்சலைட் இயக்கம் பலவீனமாகி விடும் என்பதால், திருமணம் செய்யும் நக்சலைட்களுக்கு இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதற்கு சம்மதிக்க மறுப்பவர்கள் சித்ரவதை செய்யப்படுவார்கள். வாசக்டமி செய்ய, மேற்கு வங்காளத்தில் இருந்து டாக்டர்கள் வருவார்கள்.
நக்சலைட் இயக்கத்தில் உள்ள பெண்கள் அடிக்கடி சித்ரவதைக்கும், துஷ்பிரயோகத்துக்கும் ஆளாகின்றனர்.
இவ்வாறு மத்லம் கூறினார்.

No comments:

Post a Comment