Wednesday, 1 February 2012

லாரி டிரைவரை தாக்கி ஏடிஎம் அழைத்து சென்று லஞ்ச பணம் வசூல் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லாரி டிரைவரை தாக்கி ஏடிஎம்மில் லஞ்ச பணம் எடுத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோகால் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(30), லாரி டிரைவர். கடந்த 28ம் தேதி அதிகாலை 3 மணியளவில் மணல் லோடுடன் லாரி ஓட்டி வந்தார். அவரது லாரி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியை கடந்தபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது, அவரது டிரைவரான போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் லாரியை விட்டு விடுவதாக இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். சுபாஷ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இறுதியில் ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக டிரைவர் கூறியதை தொடர்ந்து, ‘லாரி இங்கேயே நிற்கட்டும். உடனடியாக பணம் வர வேண்டும்’ என்று இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார்.
அங்கிருந்து சென்ற டிரைவர், ஊட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சித்தியிடம், பணம் கேட்டுள்ளார். அவர், ஏடிஎம் கார்டை சுபாஷிடம் கொடுத்து எடுத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்.
அதை வாங்கி வந்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்த சுபாஷ், ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாது, நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் ஏடிஎம்மில் ரூ.6 ஆயிரத்தை எடுத்து கொண்டு, சுபாஷை லாரியுடன் விடுவித்தார். சுபாஷ், கூடலூர் சென்ற பின்னர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
அவரை கூடலூர் போலீசார் விசாரித்தபோது, புதுமந்து போலீசார் தாக்கி, லஞ்சம் வாங்கிய விவரம் தெரியவந்தது. அப்போது எஸ்பி நிஜாமுதீன் கூடலூரில் ஒரு ஆய்வுக்காக வந்திருந்த£ர். இந்த விவகாரம் அவரது கவனத்திற்கு சென்றது. சம்பவம் உறுதி ஆனதால், நேற்று இரவு புதுமந்து இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது, டிரைவர் சரவணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment