நாகர்கோவில் வடசேரி செட்டித்தெருவை சேர்ந்தவர் வித்யா கேசவராஜ். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் ரூ 8 ஆயிரத்து 595 மதிப்புள்ள ஒரு மிக்சி வாங்கினார். மிக்சியை உபயோகப்படுத்திய போது சில பாகங்கள் பழுதாகி மிக்சி செயல்படாத நிலை ஏற்பட்டது. வாங்கிய கடையில் தகவல் தெரிவித்தபோது வேறு ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்க சொல்லியுள்ளனர்.
அங்கும் சரியாக பழுது நீக்கி கொடுக்காத காரணத்தால் மீண்டும் கடையை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திருவனந்தபுரத்திலுள்ள அந்த மிக்சி கம்பெனியின் சர்வீஸ் சென்டரில் கொடுக்க சொல்லியுள்ளனர். திருவனந்தபுரம் சர்வீஸ் சென்டரில் கொடுத்த போது பழுதுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டதாக மிக்சியை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு கொண்டு வந்து உபயோகப்படுத்தியபோது மீண்டும் சரியாக வேலை செய்யாமலும், ஒரு சில பாகங்களில் பழுதும் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து தனக்கு நிவாரணம் கிடைக்க கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் தாமசிடம் புகார் மனு கொடுத்தார். தாமஸ் நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்குபதிவு செய்து வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பராஜ், உறுப்பினர் சுசிலாகுமாரி, ஆகியோர் வித்யா கேசவராஜுக்கு மிக்சி நிறுவனம், மிக்சியை நல்ல நிலையில் 3 மாதத்திற்குள் பழுது நீக்கி கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதன்விலை ரூ 8 ஆயிரத்து 595-யை திருப்பி வழங்க வேண்டும். மன உளைச்சலுக்காக ரூ 3 ஆயிரமும், வழக்குச் செலவுக்கு ரூ.500- ம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.
No comments:
Post a Comment