Friday 10 February 2012

பிறந்த நாளை மறந்த கணவனுக்கு சிறை

பர்த்டே கார்டு, பூ வாங்கிட்டு மனைவியுடன் டின்னருக்கு போங்க..
அமெரிக்காவில் மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவன், குடும்ப வன்முறை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பர்த்டே கார்டு, பூ வாங்கிக் கொண்டு மனைவியை ஓட்டலுக்கு அழைத்து செல்லுங்கள்’ என்று கணவனுக்கு உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவை சேர்ந்தவர் ஜோசப் பிரே. வயது 47. இவர் தனது மனைவியின் பிறந்த நாளை மறந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, பிரேவுடன் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது மனைவியை தள்ளி விட்டுள்ளார். இந்த பிரச்னை பெரிதானதால், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பிரேவை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஹர்லே விசாரித்தார். அப்போது, பிறந்த நாள் மறந்து போனதற்கான சூழ்நிலை குறித்து பிரேவிடம் கேட்டறிந்தார். அதன்பின், ‘‘பிறந்த நாளை மறந்ததால் கணவன் & மனைவிக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது மனைவியை கோபத்தில் தள்ளிவிட்டுள்ளார் பிரே. ஆனால், அடிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும், பிரே மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. இவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. எனவே, மனைவிக்கு பர்த்டே கார்டு, பூக்களை வாங்கிக் கொண்டு டின்னர் சாப்பிட ஓட்டலுக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும். மேலும், இருவரும் திருமண கவுன்சலிங் அளிப்பவரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்’’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
விசாரணையின் போது, ‘‘கணவனை பார்த்து எனக்கு பயமில்லை’’ என்று மனைவியும் நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து பிரேவை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார். மனைவியின் பெயர்தான் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment