Tuesday, 7 February 2012

பாசவலை : கணவரின் மார்பில் சாய்ந்து மனைவியும் மரணம்

மாரடைப்பால் இறந்த காதல் கணவனை பிரிய மனம் இல்லாத மனைவி, விஷம் குடித்து கணவனின் மார்பு மீது சாய்ந்து உயிர்விட்டார்.
கோவையை சேர்ந்தவர் செந்தில்குமார்(42). நகை பட்டறை உரிமையாளர். இவரது மனைவி கிருஷ்ணவேணி(38). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் இருந்து வந்தனர்.
நேற்று காலை செந்தில்குமார், தனக்கு நெஞ்சு வலிப்பதாக மனைவியிடம் கூறி உள்ளார். இருவரும் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது, தகவல் அறிந்த அவரின் நண்பர், நகை தொழிலாளி ராதாகிருஷ்ணன் விரைந்து வந்தார். அப்போது செந்தில்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்து, உயிருக்கு போராடிய செந்திலை பார்த்த கிருஷ்ணவேணி துடி, துடித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செந்தில்குமாரை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைக்கேட்ட கிருஷ்ணவேணி மருத்துவமனையிலேயே கதறி அழுதார்.
அதே ஆம்புலன்ஸ்சில் செந்தில் குமாரின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உறவினர்களும் வீட்டில் கூடினர். ஒரு சில நிமிடங்கள் மாயமான கிருஷ்ணவேணி, பின்னர் மீண்டும் வந்து கணவனின் மார்பில் தலைவைத்து அழுது கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.
உறவினர்கள் பார்த்தபோது அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. அவரை அதே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவ பரிசோதனையில் சில நிமிடங்களுக்கு முன்பே இறந்துவிட்டது தெரியவந்தது. அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஒரே குழியில் அடக்கம்:
செந்தில்குமாரின் நண்பர்கள் கூறுகையில், "ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் செல்வார்கள். இதுவரை எவ்வித சண்டை, சச்சரவு இருந்தது கிடையாது. கணவன், மனைவி இருவரின் உடலையும் ஒரே குழியில் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment