சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் பயோமெடிக்கல் சயின்ஸ் பிரிவு பேராசிரியர் மிருதுளா சோப்ரா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தக்காளியின் மருத்துவ குணங்கள் மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் தக்காளியின் பங்கு குறித்து இவரது தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. சமைத்த தக்காளியில் உருவாகும் ரசாயன பொருள் புற்றுநோய்க்கு மருந்தாக செயல்படுவதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து மிருதுளா கூறியதாவது:
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அட்ரியாமைசின், சைக்ளோபாஸ்பமைடு போன்ற மருந்துகளை தனியாகவோ, மற்ற மருந்துகளுடன் கலந்தோ நோயாளியின் உடலில் செலுத்தி, வேகமாக பரவும் கேன்சர் செல்களை அழிப்பதே கீமோதெரபி. நோயாளியின் உடலில் உள்ள ரத்தத்தில் இருந்து தனக்கு தேவையான சத்துகளை நோய் கிருமிகள் கிரகித்துக்கொண்டு விரைவாக நோயை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் ரத்தத்தில் சத்து இல்லாமல் போவதுடன் உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
தக்காளி உள்ளிட்ட சிவப்பான பழங்களில் லைகோபீன் என்ற சத்து உள்ளது. அந்த பழங்களுக்கு சிவப்பு நிறத்தை கொடுப்பதுகூட லைகோபீன்தான். வெறும் தக்காளியிலேயே இது அதிகம் உள்ளது. சற்று எண்ணெய் விட்டு சமைக்கும்போது, லைகோபீன் சத்து அதிகமாகிறது. இது ப்ராஸ்டேட் கேன்சர் உள்ளிட்ட அனைத்து வகையான புற்றுநோய்களையும் கட்டுப்படுத்துகிறது. நோயின் தீவிரத்தை குறைப்பது மட்டுமின்றி, பரவி வரும் கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
No comments:
Post a Comment