Tuesday, 7 February 2012

போலீசாருக்கும் ஹெல்மெட் கட்டாயம் விதிமீறினால் சஸ்பெண்ட்


ஹெல்மெட் அணியும் விழிப்புணர்வை மதுரை மக்கள் மத்தியில் முடுக்கி விட போலீஸ் முடிவு எடுத்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாளைக்கு சுமார் 25 பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். சமீப காலமாக மதுரையில் விபத்துகளால் உயிரிழப்பு அதிகரித்து இருப்பதுடன், இதில் பலரும் தலைக்காயத்தால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்களிடம் ஹெல்மெட் அணியும் விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் கட்டமாக போலீசார் ஹெல்மெட் அணிய வேண்டும் என, தினகரன் நாளிதழில் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த 4ம் தேதி முதல் மாநகர் போலீசார் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
மதுரை நகருக்குள் தமுக்கம், கோரிப்பாளையம், கீழமாசி வீதி, கீழவாசல், மேலவெளிவீதி, பெரியார் பஸ் நிலையம், அரசரடி, காளவாசல், பழங்காநத்தம், தெற்குவாசல், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட 16 இடங்களில் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு டூவீலரில் வரும் ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் பதிவான நிலையில், மக்கள் விழிப்புணர்வுக்கு என மதுரை மாவட்டம் முழுவதும் பணிபுரியும் போலீசாரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க் தற்போது உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புறநகர் பகுதிகளின் 40 இடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
மதுரை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காக்கி, வெள்ளைச் சீருடையில் ஹெல்மட் அணியாமல் டூவீலரில் வரும் போலீசாரை எளிமையாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், மப்டியில் வரும் போலீசாரை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. டூவீலர்களில் போலீஸ் என எழுதப்பட்டிருக்கிறதா எனப் பார்த்தும், அடையாள அட்டையை கேட்டு பெற்றும் வழக்குப்பதிய வேண்டி இருக்கிறது.
இதில் போலீசாருக்கு அபராதம் விதிப்பதில்லை. ‘ஹெல்மட் இல்லை’ என்ற நோட்டீஸ் கொடுக்கிறோம். முதல் தடவை எச்சரிக்கை செய்து, அடுத்தடுத்து 3 முறை இலாகா பூர்வ நடவடிக்கைக்கான ‘போலீஸ் நோட்டீஸ்’ வழங்கி, முடிவாக சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள கமிஷனர், எஸ்பி, உத்தரவிட்டுள்ளனர். ஹெல்மட் அணிவதன் அவசியம் உணர்த்தவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஹெல்மெட் அணிவதில் உள்ள சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு முழுமையாக போலீசார் ஹெல்மெட் அணிவதை ஆதரித்துள்ளனர்’ என்றார்.

No comments:

Post a Comment