Monday 6 February 2012

குமரியில் விவசாயிகளை விரட்டும் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் : தனியாருக்கு லாபம்


குமரி மாவட்டத்தில் கொள்முதலுக்கு உதவாத நெல் கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கன்னிப்பூ, கும்பப்பூ என இரு பருவங்களில் நெல் உற்பத்தி நடைபெறுகிறது. முதல் பருவமான கன்னிப்பூ பருவத்தில் அம்பை 16, ஆடுதுறை 36, சம்பா நெற்பயிரும், 2ம் பருவமான கும்பப்பூ பருவத்தில் டிபிஎஸ் 3, அம்பை 16, பொன்மணி உள்ளிட்ட ரகங்களும் பயிர் செய்யப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களே நேரடியாக நெல் கொள்முதல் செய்கின்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை.
விவசாயிகள் விளைச்சலான நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் தருவாயில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லை என்று கூறி தவிர்க்கின்ற நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் குவிண்டாலுக்கு ரூ.950 என விற்பனை செய்கின்றனர். விதை, உரம், பூச்சி மருந்து, அறுவடை கூலி, நடவு கூலி, உழவு கூலி உள்ளிட்ட செலவுகளை ஒப்பிடும்போது விவசாயிகள் பெரிய அளவில் லாபத்தை எதிர்பார்க்க முடிவதில்லை.
தனியார் வியாபாரிகள் எடையில் தில்லுமுல்லு செய்கின்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ளது. விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். ஆனால் அரசு நிர்ணயம் செய்கின்ற குவிண்டாலுக்கு ரூ.1050 விவசாயிகளுக்கு ஒருபோதும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுலிங்க ஐயன் கூறியதாவது:
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் தளவாட பொருட்கள் இல்லை.
இதனால் அவர்களால் நெல்கொள்முதல் செய்ய இயலவில்லை. விவசாயிகளால் கொண்டு செல்லப்படும் நெல் தரமானது இல்லை என்று திருப்பி அனுப்புகின்றனர். இதனால் விவசாயிகள் தனியாரிடம் கொண்டு சென்று தங்கள் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும்‘ என்றார்.

No comments:

Post a Comment